“நான் வைத்த செங்கல் எங்கே?” – திமுகவிடம் அன்புமணி ராமதாஸ் கேள்வி

மத்திய அமைச்சராக இருந்தபோது 2008-ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதாகக் கூறிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நான் வைத்த அந்த செங்கல் இப்போது எங்கே?” என்று திமுக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற பாமக சார்ந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயண பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது:

“2008-ஆம் ஆண்டு நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினேன். அப்போது திமுக ஆட்சி இருந்தது. அதற்குப் பின் நான் அமைச்சராக இருந்து விலகினேன்; ஆனால் அடுத்த 3 ஆண்டுகள் திமுகதான் ஆட்சியில் இருந்தது. அவர்கள் விரும்பியிருந்தால், அதே காலத்திலேயே இந்தியாவிலேயே சிறந்த எய்ம்ஸ் மருத்துவமனையாக மதுரை உருவாகியிருக்கும். ஆனால் திமுக அதனை செயல்படுத்தவில்லை.

நான் வைத்த அடிக்கல் கல்லை கூட தொட்டுப் பார்க்கவில்லை. இதன் மூலம் தமிழக மக்களுக்கு திமுக செய்த துரோகம் வெளிப்படுகிறது. பிறகு பிரதமர் வைத்த செங்கல்லை காட்டி திமுக அரசியல் செய்து வருகிறது. நான் வைத்த கல் எங்கே? யாரை ஏமாற்றுகிறீர்கள்? எதற்காக இந்த நாடகம்?” என்று அவர் கேட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:

“தமிழகத்தில் தற்போது 1,968 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக துயரமான தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதைப் பற்றி ஊடகங்கள் மவுனமாக உள்ளன; யாரும் விவாதிக்கவில்லை.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் அளித்தும், 66 வாக்குறுதிகளையே நிறைவேற்றியுள்ளது. அதாவது, திமுக 100-க்கு 13 மார்க் மட்டுமே எடுத்துள்ளது. குறைந்தபட்சம் 35 மார்க் எடுத்தால்தான் பாஸ்மார்க். அதனால் திமுக பெயிலாகியுள்ளது. பெயில் மார்க் எடுத்த கட்சிக்கு ஆட்சியில் இருப்பதற்குத் தகுதியில்லை. பெயில் மார்க் எடுத்த ஸ்டாலினை ஆட்சியில் தொடர அனுமதிக்கக் கூடாது,” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

Facebook Comments Box