தமிழக வனப்பகுதிகளில் 3,170 யானைகள் உள்ளன: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
தமிழகத்தில் 3,170 யானைகள் உள்ளதாக வனத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தார். யானைகள் பாதுகாப்பில் தமிழகம் நீண்டகாலமாக முன்னணி வகிக்கிறது. இதற்கிடையில், கர்நாடகாவுடன் இணைந்து கடந்த மே 23 முதல் 25 வரை 3-வது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
தமிழகத்தில் புலிகள் காப்பகங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், பிராந்திய வனப் பிரிவுகள் மற்றும் ஒரு தேசியப் பூங்காவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 2,043 வனத் துறைப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். மொத்த யானைகளில் 44 சதவீதம் வளர்ச்சியடைந்தவை என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை தலைமைச் செயலகத்தில் வனத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வெளியிட்டார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் 3,170 காட்டு யானைகள் உள்ளன. முந்தைய கணக்கெடுப்பில் 3,063 யானைகள் இருந்தன.
தற்போது 107 யானைகள் அதிகமாக உள்ளன. தமிழக யானைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட இந்த நிலையான வளர்ச்சி அறிவியலை அடிப்படையாகக் கொண்ட வனவிலங்கு மேலாண்மை மற்றும் சமூக பங்களிப்பின் காரணமாக ஏற்பட்டது.
வளம் குறைந்த காடுகளை மீட்டெடுப்பது, யானை வழித்தடங்களை வலுப்படுத்துவது, மனித-யானை மோதலைத் தடுக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது போன்ற அணுகுமுறைகள் முழுமையானதும், மக்களை மையமாகக் கொண்டதும் ஆகும்.
வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு கூறியதாவது: “யானைகள் நமது காடுகளிலும் கலாச்சார அடையாளங்களிலும் முக்கியமானவை. அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது நமது கொள்கைகள் பலனளிக்கும் அறிகுறி.”
வாழ்விட மறுசீரமைப்பு, அந்நிய களைச்செடிகளை அகற்றுதல், தீவனம் மற்றும் நீர் மேலாண்மையை மேம்படுத்துதல், யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் முழு வனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.
நிழ்வில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் நிவாஸ் ஆர். ரெட்டி மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா பங்கேற்றனர்.