“கோவை உயர்மட்ட பாலத்தின் 55% பணிகள் நிறைவுற்றது அதிமுக ஆட்சியில்தான்” – பழனிசாமி பேச்சு
“அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் ரூ.1621 கோடியில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பணிகள் 55% நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஒன்றரை ஆண்டுகள் கிடப்பில் போட்டனர். அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்று கிடப்பில் போட்டு, இப்போது ஸ்டாலின் திறக்கிறார்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் போது, திருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட கரட்டுபாளையம் பகுதியில், திருச்செங்கோடு–பரமத்தி சாலையருகே நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பழனிசாமி பேசியது:
“இந்தக் கூட்டம் இரண்டு முறை தள்ளி போனது. மழை காரணமாக ஒரு முறையும், ஒரு நிகழ்வின் காரணமாக இரண்டாவது முறையும் தள்ளி போனது. நீதிமன்ற உத்தரவுக்கிணங்க பொதுக் கூட்டம் நடத்தும் சூழ்நிலை உருவானது. குறைவான நேரத்தில் தங்கமணி பல சிரமங்களையும் மீறி, அரங்கம் அமைத்து பிரமாதமாக நடத்தியிருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் நடக்கும் முதல் கூட்டமே வெற்றிகரமாக அமைந்தது.
கரூரில் நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். வேண்டுமென்றே திட்டமிட்டு அந்தக் கூட்டம் நடைபெறாமல் பிரச்சினை உருவாக்கப்பட்டது. அதிமுக எங்கு கூட்டம் போட்டாலும் அது வெற்றிக் கூட்டம்தான். தொண்டர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருகிறார்கள். 168 தொகுதிகளில் எழுச்சி பயணக் கூட்டம் நடந்து வருகிறது.
மக்களை ஏமாற்றி வாக்கு பெறுவதில் ஸ்டாலினுக்கு நிகர் யாருமில்லை. இன்று செய்திகளில் பார்த்தேன் – இனிமேல் ஆஸ்பத்திரியில் ‘பயனாளி’ என்று சொல்ல வேண்டும், ‘நோயாளி’ என்று சொல்லக் கூடாது. பெயர் மாற்றத்துக்கு ஒரு திட்டமா வேணும்? எல்லாவற்றுக்கும் பெயர் மாற்றம், இரண்டாவது பெயர் வைப்பார், இப்படிப்பட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது. போட்டோஷூட்டோடு எல்லாம் முடிந்துவிடும்.
கோவையில் நாளை திறக்கப் போகும் பாலம் — தமிழ்நாட்டிலேயே 10 கிலோமீட்டர் நீளமானது. அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.1621 கோடியில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, 55% பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஆட்சி மாறியதும், ஒன்றரை ஆண்டுகள் கிடப்பில் போட்டு, அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வரக்கூடாது என்பதற்காக தள்ளிவைத்தார்கள். இப்போது அவர் திறக்கிறார்.
நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைக்கிறார்! நல்ல பெயர் வைங்க, ஆனால் உங்க அப்பா பெயர் மட்டும் வைக்காதீர்கள். எங்க பார்த்தாலும் நாம் தொடங்கிய திட்டத்துக்கு அவர் அப்பா பெயர் வைப்பார். கஷ்டப்பட்டு திட்டம் போட்டு, நிதி ஒதுக்கியது அதிமுக அரசு, பேர் வைப்பது மட்டும் அவர். நல்லதொரு விஷயம் என்னவென்றால் — நாளை திறக்கப்போகும் பாலத்துக்கு அவர் அப்பா பெயர் வைக்காமல் நல்ல பெயர் வைத்திருக்கிறார், வாழ்த்துகள்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். அதிமுக அவர்கள் அரணாகவும், துணையாகவும் இருக்கும். விவசாயிகள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்வாரிய தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என தமிழகம் முழுக்க போராட்டக் களம் ஆனது.
ஸ்டாலின் தன்னை “இந்தியாவிலேயே சூப்பர் முதல்வர்” என்று சொல்கிறார். ஆனால் எதில்? — பொய் பேசுவதிலும், கடன் வாங்குவதிலும் சூப்பர் முதல்வர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் இடம் தமிழகம். இதனால் நம் அனைவரும் கடனாளிகளாகிவிட்டோம். இந்தக் கடனைக் கட்ட வரி போட்டுத்தான் முடிப்பார்கள்.
மின் கட்டணம் 67% உயர்ந்தது. குடிநீர், வீடு, கடை வரிகள் 100%–150% வரை உயர்ந்துள்ளன. அதோடு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக தான்! ஆண்டுக்கு 6% முதல் 9% வரை வரி உயர்த்துகிறார்கள். இப்படிப்பட்ட அரசு தொடர வேண்டுமா?
இப்பகுதியில் திமுக கவுன்சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி, போலி மதுபானம் விற்றது, அதை அவர்களுடைய அரசே கண்டுபிடித்தது. திமுக ஆட்சியில்தான் போதைப் பொருள் நடமாட்டம் அதிகம். அதிமுக ஆட்சியில் கஞ்சா விற்பனை முழுமையாக தடை செய்யப்படும்.
“10 ரூபாய் என்றால் யார் என்று உங்களுக்கு தெரியும். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடைகள். டாஸ்மாக்கில் ஒரு நாளுக்கு ஒன்றரை கோடி பாட்டில்கள் விற்பனை. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதால் நாள் ஒன்றுக்கு 15 கோடி ரூபாய், மாதத்திற்கு 450 கோடி ரூபாய், வருடத்திற்கு ரூ.5,400 கோடி — நான்கு ஆண்டுகளில் 22,000 கோடி ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் இவற்றை விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பழனிசாமி கூறினார்.