சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் இனி கோவில்பட்டியில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் நாளை (அக்.9) முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் வகையில், வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-ம் ஆண்டு செப்.24-ம் தேதி தொடங்கப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வருகிறது. மறுமுறையில், எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலிக்கு திரும்புகிறது.

முதலில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிற்கவில்லை என்பதை அறிந்ததும், கனிமொழி எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் பலர் மத்திய ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோவில்பட்டியில் ரயில் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர்கள், வணிகர்கள் தொடர்ந்து கோவில்பட்டியில் ரயில் நிற்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழாவுக்காக கோவில்பட்டி வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் பேரில் சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டார மக்கள், வணிகர்கள் மற்றும் அரசியல் அமைப்பினர் இதனை வரவேற்றுள்ளனர்.

வந்தே பாரத் ரயில் (20665/20666) நாளை (அக்.9) முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிற்கும்: திருநெல்வேலியில் காலை 6.05 மணிக்கு புறப்பட்டு, கோவில்பட்டிக்கு 6.38 மணிக்கு வந்து 6.40 மணிக்கு மீண்டும் புறப்படும். காலை 7.18 மணிக்கு விருதுநகரில் நின்று 7.20 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களில் மகிழ்ச்சி பரவி, நாளை காலை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் வந்தே பாரத் ரயிலை வரவேற்கத் தயாராக இருக்கின்றனர்.

Facebook Comments Box