போராடும் மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்களை கைது செய்வது தவறு: பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – பெ. சண்முகம் வலியுறுத்தல்
மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்கள் பணி வரன்முறை செய்யக்கோரி நடத்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“மின்வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன் தொழிலாளர்கள் தங்களை ‘கள உதவியாளர்களாக’ பணி வரன்முறை செய்யக் கோரி, அக்டோபர் 7ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 10 தலைமை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கே.கே.நகர் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல்துறை இரவு கைது செய்து, மறுநாள் அதிகாலை விடுவித்தது. பின்னர் அவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மீண்டும் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற பெருமழை மற்றும் வெள்ளத்தின் போது கேங்மேன் தொழிலாளர்கள் உயிர் பணயம் வைத்து பணியாற்றினர். இதனைத் தொடர்ந்து, அவர்களை கள உதவியாளர்களாக பணி வரன்முறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அந்த அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை என்பதே இப்போராட்டத்திற்குக் காரணம்.
கேங்மேன் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்வதற்கு பதிலாக, அவர்களை காவல்துறை மூலம் கைது செய்வது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஜனநாயக நடைமுறைக்கு முரணானது. எனவே, கைது நடவடிக்கைகளை கைவிட்டு, உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காண வேண்டும்,” என பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.