கொலை சதியுடன் பதுங்கிய ரவுடி மற்றும் நண்பரை போலீஸ் கைது: காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு

எழும்பூர் பகுதியில் கொலை சதியுடன் பதுங்கியிருந்த ரவுடியை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருடன் இருந்த நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

எழும்பூரில் இருவர் கத்திகளுடன் பதுங்கி, ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் பிரின்ஸ் ஜோஸ்வா மற்றும் எழும்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் வினோத் ராஜ் ஆகியோர் அதிரடியாக சம்பவ இடமான வீட்டுக்குள் நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த விமல்ராஜ் என்ற கபாலி மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், எதிர் தரப்பை சேர்ந்த ஒருவரை கொலை செய்யும் நோக்கில் இருவரும் பதுங்கியிருந்தது தெரியவந்தது. மேலும், பிரகாஷ் மீது ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் விழிப்புடன் செயல்பட்டு கொலைச் சதியை தடுத்து நிறுத்திய உதவி ஆய்வாளர் பிரின்ஸ் ஜோஸ்வா மற்றும் தலைமைக் காவலர் வினோத் ராஜ் ஆகிய இருவரையும், சென்னை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார்.

Facebook Comments Box