தமிழகத்தின் புத்தொழில் சூழலை மேம்படுத்த ரூ.100 கோடி நிதி – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோவையில் நடைபெற்ற உலகளாவிய ‘ஸ்டார்ட்அப்’ மாநாட்டில், தமிழகத்தின் புத்தொழில் சூழலை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் “இணை உருவாக்க நிதியம்” அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு’ அமைப்பின் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் உலகளாவிய மாநாடு கோவையில் நேற்று தொடங்கியது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியபோது கூறியதாவது:

“கடந்த நான்கரை ஆண்டுகளில், தமிழகத்தில் பல புதிய தொழில் திட்டங்கள் உருவாகி, மாநிலம் முதலீட்டாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. முந்தைய காலத்தை ஒப்பிடும்போது, கடந்த நான்கு ஆண்டுகளில் 6 மடங்கு அதிகமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்திய அரசின் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 50% நிறுவனங்கள் பெண்கள் தலைமையில் இயங்குகின்றன.

2018-ஆம் ஆண்டு கடைசிப் புள்ளியில் இருந்த தமிழகம், 2022-ல் சிறந்த புத்தொழில் கட்டமைப்பு கொண்ட மாநிலங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ‘ஸ்டார்ட்அப் ஜீனோம்’ வெளியிட்ட 2024-ம் ஆண்டின் அறிக்கையில், ஆசியாவில் சென்னை 18-வது இடத்தில் உள்ளது.

2016-ல் 1 மில்லியன் டாலராக இருந்த முதலீட்டு திரட்டும் திறன், 2024-ல் 6 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2020 முதல் 2025 வரை, தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வருடந்தோறும் 36% வளர்ச்சியுடன் முன்னேறி வருகின்றன — இது தேசிய சராசரியான 11%-ஐ விட 3 மடங்கு அதிகம்.

சென்னையை மையமாகக் கொண்ட உயர் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களில், 2021-24 காலகட்டத்தில் 66% ஆண்டு வளர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. தொடக்க நிலை நிறுவனங்களுக்கு நிதி பற்றாக்குறை இல்லாமல் ஆதரவளிக்க “டான் சீட்” நிதி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது; இதற்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் பங்கு முதலீடு வழங்கப்படுகின்றன. இதற்கான ஒதுக்கீடு 2022-23-ல் ரூ.30 கோடியில் இருந்து 2023-24-ல் ரூ.50 கோடியாக உயர்த்தப்பட்டது.

மேலும், “டான் பண்ட்” முதலீட்டாளர் இணைப்பு தளம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டதுடன், அதன் மூலம் ரூ.129.24 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் 40 நாடுகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்; 21 நாடுகள் தங்கள் அரங்குகளையும் அமைத்துள்ளன. 40 நாடுகளின் பங்கேற்போடு இம்மாநாடு நடைபெறுவது இந்தியாவில் முதல்முறையாகும்.

புத்தொழில் வளர்ச்சிக்கான வழிகாட்டி திட்டங்கள் அடங்கிய 2-வது தொகுப்பு விரைவில் வெளியிடப்படும். புதிய துணிகர முதலீட்டு நிறுவனங்களை உருவாக்கவும், உலகளாவிய முதலீட்டாளர்களை தமிழகம் நோக்கி ஈர்க்கவும் ரூ.100 கோடி மதிப்பில் “இணை உருவாக்க நிதியம்” தொடங்கப்படும். இது, “தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புதுமை இயக்கம்” மூலம் நிர்வகிக்கப்படும்.

கோவையின் வளர்ச்சிக்குத் துணைநின்று வரும் திராவிட மாடல் அரசின் பயணம், “திராவிட மாடல் 2.0”-விலும் தொடரும்,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அந்நிகழ்வில், பன்னாட்டு நிறுவனங்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மாற்றுத் திறனாளிகள் நடாத்தும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முழு மானியத்துடன் அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டன.

உகாண்டா அமைச்சர் மோனிகா, சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர் நிக்கலஸ் சாமுவேல் உள்ளிட்டோர் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியைப் பாராட்டினர். அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், தா.மோ.அன்பரசன், டிஆர்பி.ராஜா, மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநாடு இன்று நிறைவடைகிறது.

Facebook Comments Box