கரூர் கூட்ட நெரிசல் வழக்கு — தவெக நிர்வாகி மதியழகன் மீது எஸ்ஐடி 2 நாள் காவல்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தவெக மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மதியழகனை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) இரண்டு நாட்களுக்கு காவலில் எடுத்துள்ளது.
செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்; மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து கரூர் நகர போலீஸார் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையிலான எஸ்ஐடி குழு, கரூர் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தது. வழக்கு நீதிபதி பரத்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மதியழகன் தரப்பில், “போலீசார் ஏற்கனவே விசாரித்துள்ளனர்; மீண்டும் காவலில் எடுக்க தேவையில்லை. மேலும், எஸ்ஐடி விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று வாதிடப்பட்டது.
இதற்கு எதிராக அரசு தரப்பில், “முன்னர் உள்ளூர் போலீஸார் மட்டுமே விசாரித்துள்ளனர்; எஸ்ஐடி குழுவும் விசாரணை நடத்த வேண்டியது அவசியம். எனவே 5 நாட்கள் காவல் அனுமதி வழங்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, “உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறவுள்ளதால், 2 நாட்களுக்கு மட்டுமே காவல் அனுமதி வழங்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.
அத்துடன், விசாரணை முடிந்தவுடன் வரும் சனிக்கிழமை மதியம் 3.30 மணியளவில் மதியழகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு எஸ்ஐடி குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர், எஸ்ஐடி அதிகாரிகள் மதியழகனை கரூர் சுற்றுலா மாளிகைக்கு அழைத்து சென்றனர்