முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ஒத்திவைக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PG Teacher) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தள்ளி வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கடந்த ஜூலை மாதத்தில், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவித்திருந்தது.
இந்தத் தேர்வு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு திடீரென முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் தயாராக முடியவில்லை என கூறி, தேர்வை ஒத்திவைக்க கோரி பல விண்ணப்பதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீலகண்டன் தெரிவித்ததாவது:
“தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 2 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கும் நுழைவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், ஓஎம்ஆர் விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் தேர்வை தள்ளி வைப்பது விண்ணப்பதாரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்,” எனக் கூறினார்.
இதனை பதிவு செய்த நீதிபதி,
“தேர்வை தள்ளி வைக்குமாறு உத்தரவிட முடியாது,”
எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.