இருமல் மருந்து சர்ச்சையையடுத்து தமிழக மருந்து உற்பத்தி நிறுவனங்களில் திடீர் ஆய்வு

இருமல் மருந்து தொடர்பான சர்ச்சையைக் தொடர்ந்து, தமிழகத்தில் செயல்பட்டு வரும் மருந்து உற்பத்தி நிறுவனங்களில் பரவலான ஆய்வுகளை மேற்கொள்ள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது:

“அக்டோபர் 1-ம் தேதி மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறையிடமிருந்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு கடிதம் வந்தது. அதில், செப்டம்பர் 4-ம் தேதி முதல் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் குழந்தைகள் மரணம் நிகழ்ந்ததில் தொடர்புடையதாக கோல்ட்ரிஃப் சிரப் எனும் மருந்து குறிப்பிடப்பட்டிருந்தது,” என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஸ்ரீசன் பார்மா நிறுவனம் மீது குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அந்த மருந்தில் டைஎத்திலீன் கிளைகால் எனும் நச்சு ரசாயனம் 48.6 சதவீதம் அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டு, அக்டோபர் 3-ம் தேதி நிறுவனம் மூடப்பட்டது.

மேலும், மருந்து உற்பத்தி உரிமத்தை ரத்து செய்ய வேண்டிய காரணம் குறித்து விளக்கம் கோரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மத்திய பிரதேசத்திலிருந்து தகவல் வந்த 48 மணி நேரத்துக்குள் தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை அதிவேக நடவடிக்கை எடுத்தது. இந்த தகவல்கள் அனைத்தும் மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு அக்டோபர் 3-ம் தேதி மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டன.

கோல்ட்ரிஃப் மருந்தில் 48.6% நச்சு பொருள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால், அந்த மருந்து நிறுவன உரிமையாளருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.

தமிழக காவல் துறையின் உதவியுடன் மத்திய பிரதேச சிறப்பு புலனாய்வு பிரிவு அக்டோபர் 9-ம் தேதி அதிகாலை சென்னை அசோக் நகர் பகுதியில் நிறுவனம் உரிமையாளர் ரங்கநாதன் (75) என்பவரை கைது செய்தது. இதேசமயம், முதுநிலை மருந்து ஆய்வாளர்கள் இருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான மேல்நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், தமிழகத்தில் செயல்படும் பிற மருந்து உற்பத்தி நிறுவனங்களிலும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவை தற்போது நடைபெற்று வருகின்றன,” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box