‘தக் லைஃப்’ திரைப்பட விவகாரம்: கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வலியுறுத்திய நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது

நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகத்தில் வெளியிட அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், அவரை மன்னிப்பு கேட்க கூறிய உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னாவை கடுமையாக விமர்சித்தது.

‘தக் லைஃப்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், “தமிழிலிருந்துதான் கன்னடம் உருவானது” என்ற கருத்தை கமல்ஹாசன் வெளியிட்டார். இதனை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, நீதிபதி நாகபிரசன்னா, “இந்த கருத்து கன்னட மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், திரைப்படத்தை திரையிட முடியாது” என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்து சமூக ஆர்வலர் மகேஷ் ரெட்டி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு உஜ்ஜால் புயன் மற்றும் மன்மோகன் ஆகிய நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரரின் தரப்பில், “கர்நாடக திரைப்பட வர்த்தக சபை விதித்த தடையும், அரசு எடுத்த நிலைப்பாடும், இந்திய அரசியலமைப்பில் உள்ள உரையுரிமைக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் எதிரானது. கர்நாடக அரசு, சில அமைப்புகளின் அழுத்தங்களுக்கு இடம் கொடுத்துள்ளது” என வாதிடப்பட்டது.

நீதிபதி மன்மோகன் கூறியதாவது:

“மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் சான்றளித்திருக்கும் படத்திற்கு நாடு முழுவதும் வெளியீடு தடையில்லை. அந்த சான்று கொண்ட படத்தை வெளியிட தடையில்லை. சில அமைப்புகள் சட்டத்துக்கு எதிராக செயல்படுவதை எங்கும் அனுமதிக்க முடியாது. திரையரங்குகளை எரிப்பதாக எச்சரிக்கும் கன்னட அமைப்புகளுக்கு எதிராக கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏற்க முடியாதது.”

மேலும் அவர்,

“ஒரு அமைப்பு திரையரங்குகளையோ, சாலையையோ தன்னாட்சியில் வைத்துக்கொள்ளும் நிலையைச் சாதரணமாகக் கருத முடியாது. சட்டத்தை மீறுவதற்கு அரசு ஏன் வாய்ப்பு அளிக்கிறது? கமல்ஹாசனின் கருத்துக்கு எதிராக, அறிவுஜீவிகள் எதிர்வினை தெரிவிக்கலாம். ஆனால் திரையரங்குகளை கொளுத்துவோம் என மிரட்டுவது ஜனநாயகக் கொள்கைக்கு முரணானது. கர்நாடகத்தில் படத்தை திரையிட நீதிமன்றம் கட்டாயமாக அனுமதி வழங்குகிறது” என்றார்.

மேலும்,

“கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதி கூறியிருப்பது சரியானது அல்ல. நீதிமன்றத்தின் பங்கு என்ன என்பதை சிந்திக்க வேண்டியது அவசியம். மேலும், கர்நாடக அரசு ஏன் இன்னும் பதிலளிக்கவில்லை? ஜூன் 18-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் 19-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்” என தெரிவித்தார்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியதாவது:

“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு. கன்னட அமைப்புகள் இந்தத் தீர்வை புரிந்து கொண்டு, சட்டத்துக்கு உட்பட்ட முறையில் நடந்து கொள்ள வேண்டும். அரசு, சட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்புடன் செயல்படும். எனவே, ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் விரைவில் திரையிட அனுமதி பெறும்” என்றார்.

Facebook Comments Box