கீழடி ஆய்வறிக்கைக்கு மத்திய அரசின் அங்கீகாரம் தேவை: பிரதமரை சந்தித்து கமல்ஹாசன் வலியுறுத்தல்

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் எனவும், தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூலை 25-ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, டெல்லியில் பிரதமரை மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்தார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள செய்தியில், “பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை காட்டும் நோக்கில் சந்தித்தேன். தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும், ஒரு கலைஞனாகவும் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தேன். அதில் முக்கியமானது கீழடி.

தமிழர் நாகரிகத்தின் பெருமையையும் தமிழின் தொன்மையையும் உலகிற்கு வெளிப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

கீழடியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வின் அறிக்கை மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு, அந்த அறிக்கையை திருத்த வேண்டியதாகக் கூறி திருப்பியனுப்பியது. இந்த சூழ்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் நேரில் பிரதமரை சந்தித்து, அந்த ஆய்வறிக்கைக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Facebook Comments Box