தமிழகத்தில் ₹48,172 கோடி மதிப்பில் 45 சாலைத் திட்டங்கள் நடைபெறுகிறது: மக்களவையில் நிதின் கட்கரி தகவல்
தமிழ்நாட்டில் ₹48,172 கோடி மதிப்பில் 45 சாலைத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளதாக மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்தார்.
பாரத்மாலா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மொத்தமாக 1,476 கிலோமீட்டர் நீளமுள்ள 45 சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதில் 1,230 கிலோமீட்டர் பாதைகள் பணி நிறைவடைந்துள்ளதாகவும் கூறினார். இது குறித்து மக்களவையில் எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த திட்டங்கள் ₹48,172 கோடி செலவில் நடைமுறையில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த சாலைத் திட்டங்கள், ஊரக பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, சாலை இணைப்புகளை மேம்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சி, வர்த்தகத் துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றிற்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.
சில திட்டங்கள் தாமதமாகும் காரணமாக நிலம் கையகப்படுத்தல், கட்டுமான முன்னேற்பாடுகள், ஒப்பந்த நிறுவனங்களுக்கு நிதி சிக்கல்கள், கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக திட்டங்களின் மதிப்பீடும் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த சிக்கல்களை சமாளிக்க மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார். உதாரணமாக, நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த பூமி ராசி எனும் ஆன்லைன் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், வன மற்றும் சுற்றுச்சூழல் ஒப்புதல்களை விரைந்து பெற பரிவேஷ் எனும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றின் மூலம் விரைந்து ஒப்புதல்களை பெற்றுத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், திட்டங்களை விரைவாக நிறைவேற்ற மத்திய அரசு முழு கவனமும் செலுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.