குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் – பாஜக கூட்டணியின் வேட்பாளர்; ஆகஸ்ட் 21-ம் தேதி மனு தாக்கல்

மகாராஷ்டிர மாநில ஆளுநராக பணியாற்றி வரும், தமிழ்நாடு திருப்பூரைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், தனது பதவியை கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்த நிலையில், காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

1957 அக்டோபர் 20-ஆம் தேதி திருப்பூரில் பிறந்த ராதாகிருஷ்ணன், 16-வது வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்தார். 1996-ல் தமிழக பாஜக செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், 1998 மற்றும் 1999 மக்களவைத் தேர்தல்களில் கோவை தொகுதியிலிருந்து எம்.பி. ஆக தேர்வு செய்யப்பட்டார். 2004 முதல் 2007 வரை தமிழக பாஜக தலைவராக இருந்தார். பின்னர் 2023-ல் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டு, தற்போது மகாராஷ்டிர ஆளுநராக உள்ளார்.

தேர்தல் நடைமுறைகள்

  • வேட்புமனு தாக்கல்: ஆகஸ்ட் 21 வரை
  • மனுக்கள் பரிசீலனை: ஆகஸ்ட் 22
  • மனு திரும்ப பெற கடைசி நாள்: ஆகஸ்ட் 25
  • தேர்தல் நடைபெறும் தேதி: செப்டம்பர் 9
  • வாக்கு: மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் மட்டும்

ஒரு வேட்பாளரை குறைந்தது 20 எம்.பிக்கள் முன்மொழிய வேண்டும். சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகஸ்ட் 21-ம் தேதி தனது மனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இண்டியா கூட்டணி வேட்பாளர்

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்துள்ள இண்டியா கூட்டணி, விரைவில் தனது வேட்பாளரை அறிவிக்க உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இதற்கான ஆலோசனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

வெற்றி சாத்தியம்

மொத்தம் 782 எம்.பிக்கள் வாக்களிக்க உள்ளனர். வெற்றிக்குத் தேவையான குறைந்தபட்ச வாக்குகள்: 391.

  • என்டிஏ கூட்டணிக்கு: 422 எம்.பிக்கள் ஆதரவு
  • இண்டியா கூட்டணிக்கு: 312 எம்.பிக்கள் ஆதரவு

இதனால், பெரும்பான்மை பலம் பெற்றுள்ள பாஜக கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Facebook Comments Box