சிபிஆர் பெயரின் சுவாரஸ்யப் பின்னணி! – ‘முன்னாள் குடியரசு தலைவர் போல் உயர வேண்டும்’

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் உயர வேண்டும் என்று விரும்பியதால், முன்னாள் குடியரசுத் தலைவரின் நினைவாக சிபிஆருக்கு பெயர் வைத்தனர் அவரது பெற்றோர். இன்று அவர் குடியரசு துணைத் தலைவராக இருப்பதால், அந்த விருப்பம் நிறைவேறியுள்ளது.

துணை குடியரசு தலைவர் ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்த பின், புதிய வேட்பாளர் தேர்வுக்காக பாஜக ஆலோசனை நடத்தியது. டெல்லியில் நேற்று நடந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வானார்.

அவரது பெயரை அறிவித்தவர் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பாஜகவின் எதிர்கால முடிவுகளை ஊகிக்க முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. அதற்கான சான்று – தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் வேட்பாளராகத் தேர்வு.

சிபிஆர் என அழைக்கப்படுபவரின் முழுப்பெயர் – சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன். அக்டோபர் 20, 1957 அன்று திருப்பூரில் பிறந்தார். 1952-ல் இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவராக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இருந்ததால், பெற்றோர் சி.கே. பொன்னுசாமி – கே. ஜானகி, தம் மகனுக்கு ராதாகிருஷ்ணன் என்ற பெயர் வைத்தனர்.

பின்னர் 1962-ல் ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவரானார். அவரைப் போல் உயர வேண்டும் என்ற ஆசையோடு பெற்றோர் சிபிஆருக்கு அந்த பெயரை வைத்தனர். இன்று அவர் குடியரசு துணைத் தலைவராக அமர்ந்ததால், அது நிறைவேறியது.

கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த சிபிஆர், 16 வயதில் ஆர்எஸ்எஸ்-இல் இணைந்தார். அதோடு பாரதிய ஜனசங்கத்திலும் சேர்ந்தார். தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் கல்லூரியில் பிபிஏ படித்தார். அப்போது டேபிள் டென்னிஸ், நீண்டதூர ஓட்டம், கைப்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் விளையாடினார். மனைவி ஆர். சுமதி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

1974-ல் பாரதிய ஜனசங்கத்தின் தமிழ்நாடு செயற்குழு உறுப்பினரானார். பின்னர் பாஜகவாக மாறியபின் கூட அவரது முக்கியத்துவம் நீடித்தது. 2004–2006 காலத்தில் பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்தார். அப்போது 93 நாட்கள், 18,000 கி.மீ தூரம் ரதயாத்திரை செய்து, நதிகள் இணைப்பு, தீண்டாமை ஒழிப்பு, தீவிரவாத எதிர்ப்பு குறித்து பேசியார். அதிமுக-பாஜக கூட்டணிக்கு பாலமாக இருந்தார். இதன் பலனாக 1998-ல் கோயம்புத்தூரில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999-ல் மீண்டும் வென்றார்.

2012-ல் ஆர்எஸ்எஸ் நிர்வாகியை தாக்கிய விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டார். 2014-ல் கோயம்புத்தூரில் இரண்டாவது இடம் பெற்றார். இருந்தாலும், 3,89,000 வாக்குகளால் அதிக வாக்குகள் பெற்றார். 2019-ல் சிபிஎம் வேட்பாளரிடம் தோற்றார்.

2016–2020 காலத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் அமைச்சகத்தின் சார்பில் இந்திய நார் வாரியத் தலைவராக இருந்தார். அவரது ஆதரவாளர்கள் அவரை ‘தமிழகத்தின் மோடி’ என அழைத்தனர்.

பிறகு 2023 பிப்ரவரி 12 அன்று ஜார்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதோடு தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் கூடுதல் ஆளுநராகவும் இருந்தார். பிறகு ஜார்கண்டிலிருந்து மகாராஷ்டிரா ஆளுநராக உயர்ந்தார். அங்கிருந்தபடியே இப்போது நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிபிஆர் மூன்றாவது தமிழர் குடியரசு துணைத் தலைவராக வரலாற்றில் இடம் பெற்றார். முன்னர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் ஆர். வெங்கட்ராமன் அந்தப் பதவியில் இருந்தனர்.

Facebook Comments Box