மும்பையில் கனமழை காரணமாக பள்ளிகள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டன

மும்பையில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மூடல் உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றுமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத் தலைநகரான மும்பையில் கடந்த 4 நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. நேற்றைய கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முக்கிய சாலை சந்திப்புகள் நீரில் மூழ்கியதால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் அடுத்த 2 நாட்களும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் விளைவாக மும்பையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியூர் பயணிகளும் தங்களது பயணத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மும்பை பெருநகராட்சி (பிஎம்சி) வெளியிட்ட தகவலின்படி, நேற்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில், மும்பை நகரில் 186.43 மி.மீ., கிழக்கு புறநகரில் 208.78 மி.மீ., மேற்கு புறநகரில் 238.19 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேலும் நகரின் பல பகுதிகளில் மணிக்கு 45–55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மும்பையின் தாதர், மாதுங்கா, பாரெல், சியோன் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் பாதைகளில் வெள்ளநீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவையும் சீர்குலைந்து, பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

Facebook Comments Box