ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் உள்ளாரா? – எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அமித் ஷா பதில்
குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தன்கர் உடல்நலக் காரணங்களுக்காகவே ராஜினாமா செய்தார்; அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல” என்றார்.
ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது:
“ஜெகதீப் தன்கர் தனது ராஜினாமா கடிதத்தில் தெளிவாகவே காரணத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உடல்நலக் குறைபாடுகளை முன்னிட்டு பதவி விலகுவதாக கூறியுள்ளார். மேலும், தனது சிறப்பான பதவிக்காலத்துக்காக பிரதமர், அமைச்சர்கள், சகாக்கள் அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்” என்றார்.
சில எதிர்க்கட்சித் தலைவர்கள் தன்கர் வீட்டுக் காவலில் இருப்பதாக கூறுவது குறித்து அவர் விளக்கமளித்தபோது,
“உண்மையும் பொய்யும் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களால் மட்டுமே தீர்மானிக்கப்படக் கூடாது. இத்தகைய குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. தன்கர் அரசியலமைப்புச் சட்டப்படி தனது கடமைகளை செய்தவர். அவர் உடல்நலக் காரணங்களுக்காகவே ராஜினாமா செய்துள்ளார். இதற்கு மேல் அதிகம் யோசிக்கத் தேவையில்லை” என்றார்.
இந்நிலையில், தன்கரின் திடீர் ராஜினாமா குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சிலர் அவர் பொதுமக்கள் பார்வையில் இல்லாதது சந்தேகத்துக்குரியது எனவும் விமர்சிக்கின்றனர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் மூத்த தலைவருமான கபில் சிபல், “தன்கர் பொதுமக்களின் அணுகலில் இல்லை; இதுகுறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.