ஒரே அறையில் இரண்டு வாள்கள் இருப்பது இயலாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் வாதம்
மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டிய காலவரம்பு தொடர்பான வழக்கில், “ஆளுநரும் முதல்வரும் ஒரே இடத்தில் இரண்டு வாள்களாக இருக்க முடியாது” என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்த விவகாரத்தில் எழுப்பிய 14 கேள்விகளுக்கான விசாரணை இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட சாசன அமர்வில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா, ஹரியானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் – குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களை நீதித்துறை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்டுப்படுத்த இயலாது என்ற வாதத்தை முன்வைத்தன.
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, “பொறுப்புள்ள ஜனநாயக அரசில் ஆளுநருக்கு தனிப்பட்ட விருப்புரிமை கிடையாது. அவர் தனியாக முடிவு செய்வது குழப்பத்தை மட்டுமே உண்டாக்கும். அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 163 படி, ஆளுநர் அமைச்சரவை ஆலோசனை மற்றும் உதவியின் பேரில் மட்டுமே செயல்பட வேண்டும். அவருக்கு தனி சுயாதீன அதிகாரம் வழங்கப்படவில்லை,” என்றார்.
மேலும், புஞ்சி கமிஷன் அறிக்கையையும் மேற்கோள்காட்டி, “அரசியலமைப்பின் கீழ் ஆளுநருக்கு தனித்தனி பொறுப்புகள் எதுவும் இல்லை. எந்த சூழ்நிலையிலும் அமைச்சரவை முடிவுகளை மீற முடியாது” எனக் கூறினார்.
அவர் மேலும் விளக்குகையில், “ஆளுநர் சட்டப்பேரவை செயல்பாட்டின் ஒரு பகுதி என்றாலும், அவர் சட்டமன்ற உறுப்பினராக கருதப்பட மாட்டார். அவரின் பங்கு கூட அமைச்சரவை ஆலோசனைக்கே கட்டுப்பட்டது. எனவே ஆளுநர் மாநில நிர்வாகத்திலும் சட்டமன்றத்திலும் மேலாதிக்கம் செலுத்த முடியாது.
பிரிவு 168 மாநில சட்டமன்றம் ஆளுநரையும் கொண்டதாகக் கூறினாலும், எந்த அவையிலும் அவருக்கு பொறுப்பு ஒதுக்கப்படவில்லை. ஆகையால், ஆளுநர் ‘சூப்பர் முதல்வர்’ போல நடக்க முடியாது. நல்லாட்சி, ஜனநாயகம், நாடாளுமன்ற முறையின் நலனுக்காக முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். ஆளுநரின் பங்கு உதவியாக மட்டுமே இருக்க வேண்டும்; தலையிடவோ குழப்பமளிக்கவோ கூடாது. ஒரே அறையில் இரண்டு வாள்கள் நிலைத்திருக்க முடியாது; அதுபோல ஆளுநரும் முதல்வரும் ஒரே இடத்தில் இரட்டை அதிகாரம் செலுத்த இயலாது,” என்றார்.
அவர் இறுதியாக, “ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க விரும்பாதால், அதனை ஒரு முறை சட்டப்பேரவைக்கு திருப்பியனுப்பலாம், அல்லது குடியரசுத் தலைவரிடம் அனுப்பலாம். ஆனால் ஒப்புதலை காலவரையற்ற முறையில் நிறுத்தி வைத்து மசோதாவை தோல்வியடையச் செய்வதற்கான நான்காவது வழி கிடையாது” என்று தெளிவுபடுத்தினார்.