குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 452 வாக்குகள் பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் போட்டியிட்ட தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்தார். இதன்மூலம், அவர் நாட்டின் 15வது குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கிறார்.

முந்தைய துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் ஜூலை 21ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. NDA சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகள் கொண்ட “இந்தியா” கூட்டணியின் சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.

தேர்தலில் மொத்தம் 782 எம்.பி.க்களில் 767 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு காலை முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. முதலாவது வாக்கை பிரதமர் நரேந்திர மோடி பதிவு செய்தார். முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் மற்றும் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா ஆகியோரும் வாக்களித்தனர்.

மாலை 6 மணிக்கு தொடங்கிய எண்ணிக்கை இரவு 7.30 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 767 வாக்குகளில் 752 செல்லத்தக்கவையாக இருந்தன. வெற்றி பெற 377 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளையும், சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளையும் பெற்றனர். 15 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ராதாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றார்.

இதுகுறித்து மாநிலங்களவை பொதுச் செயலர் பி.சி. மோடி கூறுகையில், “மொத்தம் 752 செல்லத்தக்க வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிக வாக்குகளைப் பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து, “ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை முழுவதும் சமூக சேவைக்கும், ஏழை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டது. அவர் அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தும் சிறந்த துணைத் தலைவராக இருப்பார்” என பாராட்டினார்.

Facebook Comments Box