“சி.பி.ஆருக்கு மனசாட்சியுடன் வாக்களித்த இண்டியா கூட்டணி எம்பிக்களுக்கு நன்றி” – கிரண் ரிஜிஜு
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த இண்டியா கூட்டணி எம்பிக்களுக்கு தனிப்பட்ட நன்றியை தெரிவித்தார் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு.
நேற்றைய தேர்தலில் மொத்தம் 767 வாக்குகள் பதிவாகின. இதில் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளையும், எதிர்க்கட்சித் தரப்பின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளையும் பெற்றனர். மேலும், 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
மாலை தேர்தல் நிறைவடைந்த பின், காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், “எதிர்க்கட்சிகளின் 315 எம்பிக்களும் 100% வாக்களித்துள்ளனர். இது வரலாற்றிலேயே முதன்மையானது” என்று குறிப்பிட்டார். ஆனால், சுதர்சன் ரெட்டி பெற்ற வாக்குகள் 300-ஆக மட்டுமே இருந்ததால், எதிர்க்கட்சித் தரப்பிலிருந்த சில எம்பிக்கள் விலகியிருப்பது உறுதியாகியுள்ளது. சிலர் செல்லாத வாக்குகளாக அளித்திருந்தாலும், அது ஆளும் கூட்டணிக்கே மறைமுக ஆதரவாக அமைந்துள்ளது.
இதை சுட்டிக்காட்டிய கிரண் ரிஜிஜு தனது பதிவில், “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எங்கள் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மனசாட்சியோடு வாக்களித்த இண்டியா கூட்டணி எம்பிக்களுக்கு நன்றி. என்டிஏ கூட்டணியும், எங்கள் ஆதரவாளர்களும் ஒன்றுபட்டிருக்கிறோம். திறமையான, நேர்மையான, தேசபக்தியுள்ள புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுத்ததற்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், “இண்டியா கூட்டணி 15 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது. மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் பிரசாரம் செய்தனர். அதன் விளைவு அவர்களுக்கே கிடைத்துவிட்டது” என்று தனது பதிவில் கிண்டல் செய்தார்.