நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றார் – பிரதமர், முக்கிய தலைவர்கள் வாழ்த்து
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், குடியரசின் 15-வது துணைத் தலைவராக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முந்தைய துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர், செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள எம்.பிக்களும் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் சார்பில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார். இதில், ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மகாராஷ்டிர ஆளுநராக இருந்த அவர், அந்தப் பொறுப்பில் இருந்து நேற்று முன்தினம் விலகினார்.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், காலை 10 மணிக்கு ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். “கடவுளின் பெயரில்” என்று ஆங்கிலத்தில் பிரமாணம் செய்து கொண்டார். 2030-ம் ஆண்டு செப்டம்பர் வரை அவர் துணைத் தலைவராக பதவி வகிக்க உள்ளார். விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணைத் தலைவர்கள் ஹமீது அன்சாரி, வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
பதவியிலிருந்து விலகிய ஜெகதீப் தன்கரும் விழாவில் பங்கேற்று ராதாகிருஷ்ணனை வாழ்த்தியமை சிறப்பானதாகும்.
1957 மே 4-ம் தேதி திருப்பூரில் பிறந்த சி.பி. ராதாகிருஷ்ணன், இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். 1974-ல் பாரதிய ஜனசங்க மாநில செயற்குழுவில் இடம் பெற்றார். 1996-ல் தமிழக பாஜக செயலாளராக இருந்தார். 1998, 1999 மக்களவைத் தேர்தல்களில் கோவை தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2004-ல் ஐ.நா. இந்தியக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
2004 முதல் 2007 வரை தமிழக பாஜக தலைவராக பணியாற்றிய அவர், சுமார் 19,000 கி.மீ தூர ரதயாத்திரை நடத்தியவர். நதிகள் இணைப்பு, பொதுச் சிவில் சட்டம், தீவிரவாத ஒழிப்பு, போதைப்பொருள் தடுப்பு போன்ற பிரச்சினைகளில் தொடர்ந்து குரல் எழுப்பியவர். 2016-ல் கொச்சி தென்னை நார் வாரியத் தலைவராகவும், 2023-ல் ஜார்க்கண்ட் ஆளுநராகவும் இருந்தார். அப்போது தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார். 2024-ல் மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது துணைத் தலைவராக உயர்ந்துள்ளார்.
ராதாகிருஷ்ணனுக்கு சுமதி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்திய வரலாற்றில் இதுவரை 15 பேர் துணைத் தலைவர்களாகப் பதவி வகித்துள்ளனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர் மூன்று பேர் என்பதும் சிறப்பாகும். 1952–1962 வரை சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1984–1987 வரை ஆர். வெங்கட்ராமன் துணைத் தலைவர்களாக இருந்த நிலையில், தற்போது சி.பி. ராதாகிருஷ்ணனும் அப்பட்டியலில் இணைந்துள்ளார்.