அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு பதவியேற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள், அரசியலமைப்பு புத்தகத்தை பயன்படுத்தி சிலர் விளம்பரம் தேடுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
18வது லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். தேர்தலுக்குப் பிறகு ஜூன் 27ஆம் தேதி முதல் முறையாக நாடாளுமன்றம் கூடியது. பதவிப்பிரமாணம் செய்துகொண்ட எம்.பி.க்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றினார்.இதையடுத்து அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் இடம்பெற்றன.
இந்த விவாதத்தில் 70 எம்பிக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக ராகுல் காந்தியின் பேச்சு பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இருப்பினும், அவரது பேச்சில் இருந்து சில அம்சங்கள் நீக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார்.
இதையடுத்து இன்று ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அப்போது, “அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு சிலர் விளம்பரம் தேடுகின்றனர்” என்று விமர்சித்தார்.
“கடந்த இரண்டரை நாட்களில் சுமார் 70 எம்.பி.க்கள் இந்த விவாதத்தில் பங்கேற்றுள்ளனர். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து உங்கள் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய வரலாற்றில் நாடாளுமன்ற ஜனநாயக பயணத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை நாட்டு மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. பொதுமக்கள் அளித்த இந்த தீர்ப்பை சிலர் திட்டமிட்டு களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்.
மக்களுக்காக கடினமாக உழைக்க விரும்புகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த விரும்புகிறோம். இந்த காலகட்டத்தில் வறுமைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக இருக்கும். இந்தப் போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். சர்வதேச அளவில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக மாறும்போது, அதன் தாக்கம் மக்களின் வாழ்வில் பிரதிபலிக்கும்.
இந்திய மக்கள் ஏமாற்று அரசியலை நிராகரித்து நம்பிக்கை அரசியலுக்கு வாய்ப்பளித்துள்ளனர். சிலர் அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு விளம்பரம் தேடுகின்றனர்.
இதையடுத்து பிரதமரின் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த எம்பிக்களை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். “பொய்யைப் பரப்புபவர்களுக்கு உண்மையைக் கேட்கும் சக்தி இல்லை. உண்மையைக் கேட்க விரும்பாமல் வெளிநடப்பு செய்பவர்கள் ராஜ்யசபாவை அவமரியாதை செய்கிறார்கள்” என்று அவர் கூறினார்.
Discussion about this post