“விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன” – கரூர் நெரிசல் சம்பவத்துக்கு ராகுல் காந்தி இரங்கல்

தவெக தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தமிழ்நாட்டின் கரூரில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள் உட்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் கரூர் நகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box