காங்கிரஸ் தலைவர் கார்கே அறுவை சிகிச்சை: பிரதமர் மோடி நலம் விசாரித்தார்
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்பட்டதால், ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் நலனைக் கேட்டனர்.
82 வயதான கார்கே, தசரா விடுமுறைக்காக டெல்லியிலிருந்து 29-ம் தேதி பெங்களூருக்கு வந்திருந்தார். 30-ம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பேஸ்மேக்கர் கருவி: மருத்துவர்கள் இதயத் துடிப்பில் மாறுபாடு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததால், அவர் ஓரிரு நாளில் வீட்டிற்கு திரும்புவார் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் நேற்று மருத்துவமனையில் கார்கேவை சந்தித்து நலனைக் கேட்டனர். பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி தொலைபேசியில் கார்கேவை தொடர்பு கொண்டு நலனைக் கேட்டனர். பிரதமர் மோடி கார்கே விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்டார்.
கார்கேவின் மகனும், கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது: “மல்லிகார்ஜுன் கார்கே நலமுடன் உள்ளார். உடலில் வயதிற்கேற்ற சில சிக்கல்கள் இருந்தன. பேஸ்மேக்கர் கருவி பொருத்தும் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் இன்று வீட்டிற்கு திரும்பி, வழக்கமான பணிகளை மேற்கொள்வார்.”