பிஹார் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்தது – பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தகவல்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துவிட்டதாக பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியல் இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த அட்டவணைப்படி, 243 தொகுதிகள் கொண்ட பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறும்.

இதுகுறித்து திலிப் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

“பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டுக்காக பாஜக டெல்லியில் மூன்று நாள் தேர்தல் குழு கூட்டம் நடத்தியது. இதற்காக ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. பாஜக ஒரு தேசிய கட்சி என்பதால், வேட்பாளர்கள் தேர்வை மத்திய தலைமை தேர்தல் குழு மற்றும் நாடாளுமன்ற குழு வழியே மேற்கொள்கிறது. தற்போது தொகுதிப் பங்கீடு பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் டெல்லியில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். இன்று தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பும் வெளியாகும்,” என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பிஹாரில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள போதிலும், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மற்றும் மகாகத்பந்தன் கூட்டணி ஆகிய இரு பிரதான அணிகளும் இதுவரை தங்களது தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

Facebook Comments Box