ஒலிம்பிக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஆக்கி அணிகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களாக பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடர் விளையாட்டு ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. இந்த தொடரில் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. நெதர்லாந்து தங்கப் பதக்கத்தையும், ஜெர்மனி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றன.
இந்நிலையில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு ஹாக்கி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா (2848.67 புள்ளிகள்) 2 இடங்கள் முன்னேறி 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நெதர்லாந்து (3168.01 புள்ளிகள்) முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஜெர்மனி (3035.28 புள்ளிகள்) 2வது இடத்திலும், இங்கிலாந்து (2973.31 புள்ளிகள்) 3வது இடத்திலும், ஒலிம்பிக் போட்டிக்கு முன் முதலிடத்தில் இருந்த பெல்ஜியம் (2958.66 புள்ளிகள்) 4வது இடத்துக்கும் சரிந்துள்ளது.