மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைத்து பூஜை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

மதுரை உயர் நீதிமன்ற அமர்வு, முருக பக்தர்கள் மாநாட்டுக்கும், அதன் வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைத்து அவற்றில் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜூன் 22ம் தேதி, மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணியின் ஏற்பாட்டில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில், அறுபடை வீடுகளை மாதிரியாக அமைத்து பூஜை நடத்தும் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், இத்திட்டத்திற்கு மதுரை போலீசார் அனுமதி வழங்க மறுத்தனர். இதையடுத்து, போலீசாரின் மறுப்புக்கு எதிராகவும், மாநாட்டுக்கான அனுமதி கோரியும், இந்து முன்னணி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி. புகழேந்தி முன்னிலையில் ஜூன் 13ம் தேதி விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மாதிரி அறுபடை வீடுகளுக்கு மூன்று நாள் அனுமதி அளிக்க முடியும் என்றும் கூறப்பட்டது.

இந்து முன்னணி தரப்பில், “அனுமதிக்கப்பட்ட 52 நிபந்தனைகளில் ஆறு நிபந்தனைகளை நிறைவேற்ற சிரமம் உள்ளது. அதனால் அவற்றில் மாற்றம் தேவை,” என வாதிடப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி வெளியிட்ட உத்தரவில்,

  • மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு மறுத்த போலீசாரின் உத்தரவு இரத்து செய்யப்படுகிறது
  • பூஜைகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது
  • மாநாட்டுக்கு 52 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன
  • அவற்றில் 6 நிபந்தனைகளில் மாற்றம் செய்ய உத்தரவிடப்படுகிறது
  • ஆன்மிக நிகழ்ச்சியை அரசியல் மேடையாக மாற்றக்கூடாது, நிபந்தனைகளை பின்பற்றி மாநாடு நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டது.

காவல் துறையின் முக்கிய நிபந்தனைகள்:

மாநாட்டில் பங்கேற்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காவல் துறையினர் கீழ்க்கண்ட நிபந்தனைகளை அறிவித்துள்ளனர்:

  • தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வண்ணம்கொடுத்த அனுமதி பாஸ் வழங்கல்
  • தனிப்பட்ட மற்றும் VVIP வாகனங்களுக்கு தனி பார்க்கிங் வசதி
  • போக்குவரத்து பாதிப்பு இல்லாத வகையில் ஏற்பாடுகள்
  • பங்கேற்பவர்களுக்கு மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை
  • பெண்கள், ஆண்களுக்கு தனித் தற்காப்பு ஏற்பாடுகள்
  • சுகாதாரம், குடிநீர், ஆம்புலன்ஸ், சிசிடிவி கண்காணிப்பு போன்ற அடிப்படை வசதிகள்
  • உணவுப் பொருட்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையின் அனுமதி
  • பள்ளி/கல்லூரி மாணவ, மாணவிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருக்க அறிவுறுத்தல்
  • அறுபடை வீடுகள் மாதிரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் முன் அனுமதி
  • முன்கூட்டியே அனைத்து ஏற்பாடுகளையும் முடித்து, ஜூன் 18க்குள் காவல் துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
Facebook Comments Box