ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி சேரும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லியில் நடைபெற்ற அடுத்த கட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பின், வரி குறைப்பின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வரும் 22-ம் தேதி முதல் வழங்க பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் வரிச்சலுகை அளிக்க வேண்டும். நடுத்தர தர மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். விவசாயிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்குப் பெரும் முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஜிஎஸ்டி வருவாய் 2017-18-ம் ஆண்டு ரூ.7.19 லட்சம் கோடியாக இருந்தது. அது 2025-ல் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை முன்பு 65 லட்சம் இருந்தது; தற்போது அது 1.51 கோடியாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி சேரும். இதனால் மக்களின் கையில் கூடுதல் பணப்புழக்கம் இருக்கும்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வரிமுறைகள் சிக்கலானவையாக இருந்தன. அதனால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி அமைப்பை கொண்டு வந்துள்ளோம். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டாட்சி தத்துவத்தின் சிறந்த எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.