இந்திய சினிமாவில் உச்சமான நிலையை நடிகர் விஜய் எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. காரணம், அவர் நடிக்கும் புதிய படம் ‘ஜனநாயகன்’க்காக ரூ.250 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடித்துவரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது இதன் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் உள்ளது; இன்னும் சில நாட்கள் மட்டுமே நிறைவு செய்ய வேண்டியுள்ளது. இந்தப் படத்தின் உரிமைகளை கைப்பற்ற பல நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், விஜய்க்கு இப்படத்திற்கு ரூ.250 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஜி.எஸ்.டி தொகையும் சேரும் என்பதும் தற்போது வெளியான தகவல்களில் ஒன்று.
இதனால், இந்திய திரையுலகில் நேரடி சம்பளமாக மிக அதிக தொகை பெறும் நடிகராக விஜய் நிலைபெற்றுள்ளார். ஏனெனில், பெரும்பாலான முன்னணி நடிகர்கள் ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகையை மட்டுமே பெறுகிறார்கள்; அதற்கு மேலாக திரைப்படத்தின் வருமானத்தில் பங்கு பெற்றுக் கொள்வது வழக்கம். ஆனால், விஜய் சம்பளமாகவே இந்த அளவுக்கு பெற்றுள்ளார் என்பது திரையுலகில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இதனை விஜய் ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடி வருகின்றனர். மேலும், இவ்வளவு பெரிய சம்பளத்தை பெற்ற பிறகும், ‘சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவேன்’ என்ற முடிவை எடுத்திருக்கிறார் எனும் விஷயம், அவரது வளர்ச்சியை வலியுறுத்துவதாகவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விஜய் மீண்டும் சினிமாவில் கலந்துகொள்வார் எனத் திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.