ஆ.ராசா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜூலை 23-ல் குற்றச்சாட்டு பதிவு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

0

சொத்துக் குவிப்பு வழக்கில் ஆ. ராசா மற்றும் பிறருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் ஜூலை 23-ஆம் தேதி பதியப்படும் என நீதிமன்றம் அறிவிப்பு

சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கில் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மற்றும் பிறருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வரும் ஜூலை 23-ஆம் தேதி பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நாளில், ஆ. ராசா உட்பட தொடர்புடைய அனைவரும் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி. ஆன ஆ. ராசா, தனது வருமானத்தைவிட அதிகமாக சொத்துகள் குவித்ததாகக் கூறி, சிபிஐ 2015ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. சுமார் ஏழு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற விசாரணையின் பிறகு, 2023ஆம் ஆண்டு அவர் மற்றும் அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பி.வி.டி. லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட், என். ரமேஷ் மற்றும் விஜய் சடரங்கனி ஆகியோர் உள்ளிட்ட நால்வர் மற்றும் இரண்டு நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த குற்றப்பத்திரிகையில், குற்றச்சாட்டுக்குரிய காலப்பகுதியில் ஆ. ராசா ரூ.5.53 கோடி மதிப்புள்ள சொத்துகளை, அவரது அறிவிக்கப்படாத வருமானத்தைவிட 579% அதிகமாக குவித்ததாக கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு, பின்னர் எம்.பி./எம்.எல்.ஏ. வழக்குகளுக்கென அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், கடந்த ஆண்டு, ஆ. ராசா தனது வருமான வரி கணக்குகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கோரி மனுத் தாக்கல் செய்தார். ஆனால், சிபிஐ அதனை எதிர்த்து, “அந்த ஆவணங்கள் அவரிடம் இருக்கலாம்; விசாரணையின் போது அவற்றை சமர்ப்பிக்கலாம்” என வாதிட்டது. இதையடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஜூன் 17) நீதிபதி என். வெங்கடவரதன், ஆ. ராசா தாக்கல் செய்த மனுவை நிராகரித்து, குற்றச்சாட்டுகள் ஜூலை 23-ஆம் தேதி பதிவு செய்யப்படவுள்ளதாகவும், குற்றச்சாட்டுக்குள்ளான அனைவரும் அந்த நாளில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here