இனிமேல் மக்களை நோக்கி அதிகாரிகள் வருவார்கள்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

0

இனிமேல் மக்களை நோக்கி அதிகாரிகள் வருவார்கள்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைத்தார். இதன்போது பேசிய அவர், இனிமேல் மக்கள் அலுவலகங்களை நாட வேண்டியதில்லை, அதிகாரிகள் அவர்களை நேரில் தேடி செல்வார்கள் என உறுதியளித்தார்.

காமராஜரின் பிறந்த நாளையொட்டி சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பரமேஸ்வரநல்லூர் பகுதியில் நடைபெற்ற விழாவில் உரையாற்றினார்.

முன்னைய திட்டங்களின் தொடர்ச்சி…

முதல்வர் கூறியதாவது:

2021-க்குப் பின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மக்கள் மனுக்களைப் பெற்றோம். அதன் அடிப்படையில் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற இயக்கத்துடன், தனித்துறை அமைத்து 100 நாட்களில் அந்த மனுக்களுக்கு தீர்வு வழங்கினோம்.

பின்னர், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுக்க 5,000 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன. அவ்வாறு பல்லாயிரக்கணக்கான மனுக்களுக்கு நேரடியாக தீர்வு வழங்கப்பட்டது.

இப்போது ஆரம்பமாகியுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், அதன் மூன்றாவது கட்டமாகும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் 10,000 முகாம்கள் நடைபெறும். இதில் தன்னார்வலர்கள் வீடு தேடி சென்று மக்கள் குறைகளை கேட்டு, 46 வகையான சேவைகளுக்கான விண்ணப்பங்களைப் பெறுவார்கள்.

மகளிர் உரிமைத்தொகை – முக்கிய அறிவிப்பு

இந்த முகாம்கள் மூலமாகவே மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். தகுதி உள்ள பெண்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நிச்சயமாக நிதி உதவியை பெற முடியும்.

இனிமேல் மக்கள் அலுவலகங்களை நாட வேண்டிய அவசியமில்லை. அதிகாரிகள் தாங்களே மக்களை நேரில் சந்தித்து சேவைகளை வழங்குவர்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ – அரசியல் உரை

இந்த மேடையில் அம்பேத்கர், காந்தி, மார்க்சியவாத தலைவர்கள் ஒருங்கிணைந்து அமர்ந்துள்ளனர். இதுவே தமிழ்நாட்டின் ஒற்றுமையை சுட்டிக்காட்டும். இப்படியான மாநிலத்தில், டெல்லியின் காவி அரசியலுக்கான கனவுகள் நிறைவேறாது என்றார் ஸ்டாலின்.

இளையபெருமாளுக்கு மரியாதை

அம்பேத்கர் பெயரிலான தமிழக அரசின் முதல் விருதைப் பெற்றவர் இளையபெருமாள். அவரது சாதனையை நினைவுகூர்ந்து, சிதம்பரத்தில் அவரது நூற்றாண்டு அரங்கம் மற்றும் சிலை திறந்து வைக்கப்பட்டது. இது திராவிட மாதிரி ஆட்சியின் நன்றிக்கடனாகும்.

விழாவில் கலந்துகொண்ட முக்கியர்கள்:

அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, பன்னீர்செல்வம், சாமிநாதன், செல்வப்பெருந்தகை (தமிழ்நாடு காங்கிரஸ்), இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), காதர் மொய்தீன் (முஸ்லிம் லீக்), கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சேவைகள்:

மொத்தம் 46 சேவைகள் வழங்கப்படும். அவற்றில் சில:

  • பட்டா பெயர் மாற்றம்
  • பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள்
  • மின்சாரம் இணைப்பு
  • வேளாண் மானியம்
  • மகளிர் உதவித்தொகை விண்ணப்பம்

சேவைகள் கிடைக்கும் இடங்கள்:

  • நகர்பகுதிகளில் – 3,768 முகாம்கள்
  • ஊரக பகுதிகளில் – 6,232 முகாம்கள்

முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கல் என்பது இலக்காகக் கொண்டுள்ளது.