“சாமி இல்லை என்று கூறி தமிழரின் மண்ணை அவமதிக்காதீர்கள்” – இயக்குநர் பேரரசு உரை
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கடந்த 27ஆம் தேதி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி, காரைக்காலில் இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநர் பேரரசு கலந்து கொண்டார். குறிப்பாக புதுச்சேரி சாரம் பகுதியில் 21 அடி உயர சிலை வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. விழா முடிந்த மூன்றாம் நாளில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 5ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 31) புதுச்சேரி பல இடங்களில் இருந்த 50-க்கும் அதிகமான சிலைகள், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கடற்கரை சாலை பழைய நீதிமன்றம் அருகே கொண்டு செல்லப்பட்டன. அங்கு நடைபெற்ற மகா ஆரத்தி விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டு தரிசனம் செய்தார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், இந்து முன்னணி மாநிலத் தலைவர் சனில்குமார், பாஜக தலைவர் ராமலிங்கம், எம்பி செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அரசு அனுமதியுடனான இடத்தில், பெரிய கிரேன் மூலம் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
அதற்கு முன் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு உரையாற்றியபோது, அவர் கூறியது:
“தமிழகம், புதுச்சேரி இரண்டும் தமிழ்மண். நாம் தமிழ்த்தாயின் பிள்ளைகள்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த சிரமங்கள் அதிகம். அது சவாலானதாகவே உள்ளது. தமிழகம் ஆன்மிக நிலம். இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த இடத்தில் மத ஊர்வலங்களுக்கு இவ்வளவு தடைகள் ஏன்? இதற்குக் காரணம் ஆளும் கட்சியா அல்லது சில தனிநபர்களா என்ற கேள்வி எழுகிறது.
ஆனால் புதுச்சேரியில் விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடைபெறுகிறது. இந்துமதம் என்பது வெறும் வழிபாடு மட்டுமல்ல, அது பண்பாடு, கலாசாரம், வாழ்வியல் முறையுடன் கலந்த ஒன்று. வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதுதான் இந்துமதத்தின் அடிப்படை.
தமிழ் மொழியும் ஆன்மிகமும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது. தமிழகம் ஆன்மிக ஆடை அணிந்த நிலம். அதில் சிறு கரைபோல நாத்திகம் இருக்கலாம். சிலர் சாமி இல்லை எனலாம். ஆனால் அது அரசியலாகி விட்டது.
பல கட்சிகள் நாத்திகத்தை கொள்கையாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், இது பெரியார் மண் என்று சொல்ல முடியாது. இது அகத்தியர், விவேகானந்தர், பாரதியார் வாழ்ந்த மண். இது ஆன்மிக பூமி.
இங்கு சாமி இல்லை என்று கூறி மண்ணை மாசுபடுத்தாதீர்கள். சாமியை விரும்பவில்லை என்றால் கும்பிட வேண்டாம். ஆனால் கும்பிடுவோரைக் குறை சொல்லக்கூடாது.
ராஜராஜ சோழன், மருதுபாண்டியன், ராஜேந்திர சோழன் என இந்தியா முழுவதிலும் அரசர்கள் தங்கள் ஆட்சிப் பகுதிகளில் கோயில்களை கட்டினர். அவர்களுக்கு பக்தி இருந்தது. ஆனால் ஒற்றுமை இல்லை. இருந்திருந்தால் முகலாயர், ஆங்கிலேயர் வர முடியாது.
இப்போது கோயில்களுக்கு செல்லும் குழந்தைகள் குறைந்து விட்டனர். பிற மதங்களில் போல பெற்றோர் குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்துமதத்தில் எண்ணற்ற கதைகள் உள்ளன; அவற்றை குழந்தைகளுக்குக் கூற வேண்டும். பக்தி அவர்களின் வாழ்க்கைக்கு நல்லது.” என அவர் தெரிவித்தார்.