“தமிழக மக்களின் இதயத்தில் இடம் பெற்றவர்” – ரோபோ சங்கர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் அனுதாபம்
நடிகர் ரோபோ சங்கர் மறைவையொட்டி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட செய்தியில், “திரைக்கலைஞர் ரோபோ சங்கர் காலமான செய்தி என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மேடை நிகழ்ச்சிகளிலிருந்து ஆரம்பித்து, தொலைக்காட்சி மற்றும் திரைத்துறையிலும் தனித்துவமான நடிப்பால் மக்களை மகிழ்வித்தவர். அவரை இழந்த குடும்பத்தினருக்கும், கலைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை காரணமாக உடல் எடை குறைந்து பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், பின்னர் உடல்நிலை சீராகி மீண்டும் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அண்மையில் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி இன்று (செப்.18) அவர் உயிரிழந்தார்.
ரோபோ சங்கரின் மறைவிற்கு திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.