எஸ்.ஜே.சூர்யா, அனிருத் உட்பட 90 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்; பாடகர் ஜேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது

நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, நடிகை சாய்பல்லவி, இசையமைப்பாளர் அனிருத் உட்பட 90 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பாரதியார் விருது ந.முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது கே.ஜே. ஜேசுதாஸுக்கும், பால சரஸ்வதி விருது முத்துகண்ணம்மாளுக்கும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த கலை நிறுவனத்துக்கு கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவுக்கு சுழற்கேடயம் வழங்கப்படுகின்றன.

கலைமாமணி விருது வழங்க விண்ணப்பங்கள் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் வாரியாக கலைமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, வல்லுநர் குழுக்கள் மூலம் தகுதியுள்ள கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து, 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதாளர்களின் பட்டியலின் அரசாணை வெளியிடப்பட்டது.

  • 2021: நாடகப் பிரிவில் பூச்சி எஸ்.முருகன்; திரைப்படப் பிரிவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய்பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட 30 பேர்.
  • 2022: நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட 30 பேர்.
  • 2023: நடிகர் கே.மணிகண்டன், குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட 30 பேர்.

விருதுகள்: கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 பவுன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.

அகில இந்திய விருதுகள்:

  • பாரதியார் விருது (இயல்) – ந.முருகேச பாண்டியன்
  • எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை) – பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ்
  • பால சரஸ்வதி விருது (நாட்டியம்) – முத்துகண்ணம்மாள்

இவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் 3 பவுன் எடையிலான தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

சிறந்த கலை நிறுவனமாக சென்னை தமிழ் இசை சங்கம் (ராஜா அண்ணாமலை மன்றம்), சிறந்த நாடகக் குழுவாக மதுரை பாலமேடு கலைமாமணி எம்.ஆர்.முத்துசாமி நினைவு நாடக மன்றம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த விருதுகள் சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

Facebook Comments Box