இளையராஜா பாடல் பிரச்னை: சோனி நிறுவனம் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை வணிக நோக்கில் பயன்படுத்தி சம்பாதித்த வருமானம் தொடர்பான தகவல்களைச் சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் சோனி நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

சோனி மியூசிக் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட், எக்கோ ரெக்கார்டிங், அமெரிக்க ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றுக்கு எதிராக பிரபல இசையமைப்பாளர் மற்றும் மாநிலங்களவை எம்.பி. இளையராஜா மனு தொடர்ந்திருந்தார்.

அதில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 7,500 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளதையும், தனது இசைப்பணியை மத்திய, மாநில அரசுகள் பல விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளதையும் குறிப்பிட்டார். தனது இசை படைப்புகள் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டவை என்றும், அதன் உரிமை முழுமையாக தன்னிடமே உள்ளது; மற்றவர்களுக்கு அதைப் பயன்படுத்த அதிகாரமில்லை எனவும் விளக்கினார்.

ஆனால் சோனி நிறுவனம் மற்றும் பிற இசை நிறுவனங்கள், தனது அனுமதி இல்லாமல் பாடல்களை மாற்றியும், சமூக வலைதளங்கள், ஊடகங்கள் வழியாகவும் பயன்படுத்தி வருவதாகவும், இது சட்ட விரோதமானது என்றும் இளையராஜா தெரிவித்தார். சோனி நிறுவனம் எக்கோ நிறுவனத்திடம் இருந்து பாடல்களை பெற்றதாகக் கூறினாலும், அதற்கு உயர் நீதிமன்ற தடை உத்தரவு இருந்தது. அந்த உத்தரவை மீறியே பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் வலியுறுத்தினார்.

மேலும், தனது பாடல்களின் உரிமையை எவருக்கும் மாற்றி அளிக்கவில்லை, சோனி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் பாடல்களைப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். சோனி நிறுவனம் தனது பாடல்களை பயன்படுத்தி ஈட்டிய வருமான விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கோரினார்.

இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், சோனி நிறுவனம் தவறாக பாடல்களை உபயோகித்து பணம் சம்பாதித்து வருகிறது என்று வாதிட்டார். இதனையடுத்து, நீதிபதி என்.செந்தில்குமார், சோனி நிறுவனம் பாடல்களை வைத்து ஈட்டிய வருவாய், வரவு–செலவுத் தகவல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். வழக்கு அக்டோபர் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Facebook Comments Box