தம்மம்பட்டியில் பாரத் ஸ்டேட் வங்கியின் பார்வையற்ற ஊழியர்,கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி புதன்கிழமை பிற்பகல் உயிரிழந்தார்.
தம்மம்பட்டி அருகே உலிபுரத்தை அடுத்து, நாரைக்கிணறு செல்லும் தோட்டப்பகுதியைச் சேர்ந்த, மறைந்த புருசோத்தமன் என்பவரின்  மகன் ராஜேஸ்வர கௌதம்(29). திருமணமாகாத இவருக்கு தாய், தம்பி உள்ளனர்.
இவர் பிறவியிலேயே கண்பார்வையை இழந்த இவர், தன்னம்பிக்கையுடன் பட்டப்படிப்பு படித்து, பாரத் ஸ்டேட் வங்கியில் ஊழியரானார். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தம்மம்பட்டி பாரத் ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வருகின்றார். இவர் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் கனிவாகவும், பாசத்துடனும், பொதுமக்களிடம் நல்ல பெயருடன் வங்கிச் சேவையை செய்து வந்தார்.
இவர் கடந்த சிலவாரங்களுக்கு முன்னர், கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி வீடு திரும்பினார். அதன்பிறகு கண்ணில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் சேலம்,நாமக்கல் ஆகிய ஊர்களிலுள்ள தனியார் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று இறுதியாக கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும் கருப்பு பூஞ்சை தொற்று, மூளையை தாக்கி, ஒரு பக்கம் செயலிழக்கத்தொடங்கியது. இந்நிலையில் சிகிச்சைபலனின்றி, புதன்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தம்மம்பட்டி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தம்மம்பட்டி பகுதியைச்சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், பாமர மக்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Facebook Comments Box