தவெக தலைவர் விஜய்யின் 51வது பிறந்தநாளையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் தவெகவினர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, உற்சாகமாக பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா நேற்று தமிழகமெங்கும் விமர்சையாக அனுசரிக்கப்பட்டது. விழாவையொட்டி தவெக நிர்வாகிகள் நலத்திட்டங்கள், அன்னதானங்கள், மருத்துவ உதவிகளை வழங்கினர்.
பெருநகர சென்னை நீலாங்கரையில், சக்தி முத்துமாரியம்மன் கோயில், தேவாலயம் மற்றும் மசூதிகளில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அதேபோல், சென்னையின் பல்வேறு மருத்துவமனைகளில் பிறந்த 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள், பேபி கிட்கள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
அரசியல் தலைவர்கள் தெரிவித்த வாழ்த்துகள்:
- நயினார் நாகேந்திரன் (தமிழக பாஜக தலைவர்): விஜய் நீண்ட ஆயுளுடன் மக்களுக்காக பணியாற்ற வாழ்த்துகள்.
- செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற விஜய், பொது வாழ்விலும் வெற்றிகளை தொடர வாழ்த்துக்கள்.
- அன்புமணி (பாமக தலைவர்): நீண்ட ஆயுளோடு பொது சேவையில் சாதனைகள் படைக்க வாழ்த்துகள்.
- ஓ. பன்னீர்செல்வம்: திரைப்படத்தில் போலவே அரசியலிலும் மக்கள் நலப்பணிகளில் முன்னேற வேண்டும்.
- அண்ணாமலை (முன்னாள் பாஜக தலைவர்): உடல்நலத்துடன் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட இறைவனை வேண்டுகிறேன்.
- ஜி. கே. வாசன் (தமாகா தலைவர்): தமிழக மக்கள் நலனில் ஈடுபட நலத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகள்.
- சீமான் (நாதிக தலைவர்): தனது திறமைகளால் திரையுலகில் உச்சம் தொட்டவர் விஜய், மக்களை மகிழ்விப்பதில் முன்னிலை வகிக்கிறார்.
- டிடிவி தினகரன் (அமமுக பொதுச் செயலாளர்): நீண்ட நாள் வாழ்ந்து, மக்கள் நலத்துக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.