கலங்கும் கரூர்.. விஜய் ரசிகர்கள் RCB ரசிகர்கள் போல.. கட்டுக்கடங்காமல்.. விதிமுறையும் மதிக்கவில்லை

கரூர் மாவட்டத்தில் இன்று தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்திற்கு ஏராளமான ராசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் நெரிசல் காரணமாக மயக்கமுற்று கவலைக்கிடமாக உள்ளனர். விஜய் ரசிகர்களை பொறுத்தவரை, பெங்களூர் ஆர்சிபி ரசிகர்கள் போல கட்டுப்பாடு இல்லாமல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இந்நிலையில் பெங்களுரை போல் மிகப்பெரிய மோசமான அசம்பாவிதம் கரூரில் நிகழ்ந்துள்ளது.

நடிகர் விஜய் பங்கேற்கும் ஒவ்வொரு பரப்புரையிலும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தொண்டர்கள் கட்டுக்கடங்காமல் பங்கேற்று வந்துள்ளனர். விக்கிரவாண்டி, மதுரை, கோவை, திருச்சி, அரியலூர், நாகை என எந்த ஊர் கூட்டத்தில் ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளவில்லை என்ற புகார்களை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வைத்துள்ளன.

விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல், பல கிமீ நீளத்திற்கு கூட்ட நெரிசலை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் நடந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் மரத்தில் ஏறுதல், டவரில் ஏறுதல், சுவரில் ஏறுதல், கண் மூடித் தரித்து விஜய்யை பார்க்க முயற்சி போன்ற நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. ஏனெனில் விஜய் இதுவரை பங்கேற்ற எல்லா சனிக்கிழமை பிரச்சாரங்களிலும் ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் திரளாக வந்துள்ளனர்.

விஜய்யை பார்க்க சாப்பிடாமல் கூட காலை முதலே காத்துக்கொண்டிருப்பதாக பல ரசிகர்கள் பேட்டி அளித்துள்ளனர். பள்ளி விடுமுறை நாளான சனிக்கிழமைகளில், நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டதால், ஏராளமான பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் பிரச்சாரத்தை காண வந்தனர். இதனால் ஒவ்வொரு இடத்திலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கடந்த வாரம் வரை எந்த அசம்பவாதத்திற்கும் காரணமாக இல்லாத இந்த கூட்ட நெரிசல், இன்று கரூரில் மிகப்பெரிய கூட்ட நெரிசலுக்கு காரணமாக மாறியது.

பல பெண்கள், குழந்தைகளுடன் விஜய்யை காண வந்தனர். அவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. சில நிமிடங்களில் மூச்சுவிட முடியாமல் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். விஜய் ரசிகர்கள் பலர் பெங்களூர் ஆர்சிபி கிரிக்கெட் ரசிகர்கள் போல கட்டுப்பாடு இல்லாமல் நடந்ததுதான் இந்த சம்பவத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

பெங்களூர் ஆர்சிபி கிரிக்கெட் கடந்த முறை ஐபிஎல் போட்டியில் கோப்பை வாங்கியது. அப்போது சின்னசாமி ஸ்டேடியத்தில் விராட்கோலி மற்றும் கிரிக்கெட் வீரர்களை காண வெறித்தனமாக குறுகிய சாலையில் முண்டியடித்தனர்; இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதேபோல், இன்று விஜய் ரசிகர்கள் ஒரே நேரத்தில் விஜய்யை பார்க்க முண்டியடித்ததனால் பல பெண்கள், குழந்தைகள் உயிரிழந்தனர் என திமுகவினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் கருப்பு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்கும் போது காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்; இதுபோன்ற மோசமான அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடாது. இந்த நெரிசல் உண்மையான கசப்பான சம்பவமாக இருந்தாலும், விஜய் கூடுதல் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்; விஜய் ரசிகர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் அரசியல் பிரச்சாரங்கள் எப்படி நடத்தப்படவேண்டும் என்பதற்கான உதாரணமாக இந்த கரூர் நிகழ்வு கருப்பு நிகழ்வாக அமைந்துள்ளது.

Facebook Comments Box