விஜய் சொன்னதை விஜய்யே பின்பற்றல.. இவ்வளவு பேர் செத்துப்போயிட்டாங்களே.. கடவுளே!
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று, செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு அவரைக் காண, பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இப்படி இருக்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 33 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த துக்க நிகழ்வுக்கு காரணம் விஜய் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள், காவல் துறை அறிவுறுத்தல்களை பின்பற்றாததுதான் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
இன்று சுற்றுப் பயணத்தில் அவர் காலை 8.45 மணிக்கு நாமக்கலில் பேச அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அவர் தனது சென்னை வீட்டில் இருந்து காலை சுமார் 8 மணிக்குத்தான் விமானநிலையத்திற்கு புறப்பட்டார். காலை 8.45 மணிக்கு நாமக்கலில் உரையாற்ற, அவர் 8 மணிக்கு புறப்பட்டிருந்தால், விஜய் மெத்தனமாக காலையில் தனது பயணத்தை தொடங்கி உள்ளார் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.
விஜய்யே பின்பற்றவில்லை: இது மட்டும் இல்லாமல், அவர் தனது கட்சித் தொண்டர்களுக்கு காவல்துறை அறிவுறுத்திய வழிகாட்டுதல்களை பின்பற்றச் சொல்லி அறிவுறுத்தியிருந்தாலும், அதை அவர் தானே பின்பற்றவில்லை. அப்படி இருக்கும்போது, அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் எப்படி பின்பற்றுவார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நினைத்து, பலரும் வருத்தத்தில் உள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயருமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது. அதே நேரத்தில், பலி எண்ணிக்கை உயரக்கூடாது என்று பிரார்த்தனைகளிலும் பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.
விஜய் காரணமா?: இந்த சோக நிகழ்வுக்கு முழுக்காரணம் விஜய் தான் என்று விமர்சிப்பவர்களும் உள்ளனர். மதியம் 12 மணிக்கு கரூரில் அவருக்கு பேச அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் மாலை சுமார் 7 மணிக்கு அங்கு வந்தார். ஒருவேளை காவல்துறை சொன்ன நேரத்திற்கு அவர் வந்திருந்தால், வெளிச்சத்தில் இவ்வளவு பெரிய சோக நிகழ்வு நடக்க வாய்ப்புகள் குறைவாக இருந்திருக்கும் என்றும் பேசி வருகிறார்கள்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உட்பட பல அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் என பலரும் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று நிலையை கண்காணித்து வருகிறார்கள். முதலமைச்சரும், போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.