ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி: துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி ‘ஏ’ குழுவில் இடம் பெற்றுள்ளது. அதே குழுவில் பாகிஸ்தான், ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளும் உள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் மும்பையில் நேற்று தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் நடந்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவும் இதில் பங்கேற்றார்.
இந்திய டெஸ்ட் அணியின் தலைவரான ஷுப்மன் கில், ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் டி20 அணிக்குத் திரும்பியுள்ளார். துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர், கடைசியாக 2024 ஜூலை மாதத்தில் இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் விளையாடியிருந்தார். இங்கிலாந்து பயணத்தில் பணிச்சுமை காரணமாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இப்போது தான் சர்வதேச டி20 போட்டிகளுக்கு மீண்டும் வருகிறார் பும்ரா. அவருடன் வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா தேர்வாகியுள்ளனர். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களாக வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர்–பேட்ஸ்மேன்களாக சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா தேர்வாகியுள்ளனர். டாப் ஆர்டரில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா இடம்பிடித்துள்ளனர். பினிஷராக ரிங்கு சிங் தனது இடத்தை தக்க வைத்துள்ளார். இதேசமயம், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய அணி பட்டியல்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.