பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தங்களை இணைத்ததற்காக, ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில், யூடியூப் சேனல்களுக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

பொள்ளாச்சியில் 2019-ஆம் ஆண்டு, கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பெண்கள் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதனை வீடியோ படம் பிடித்து பணம் கேட்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், கோவை மகளிர் நீதிமன்றம் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

இந்தச் சூழலில், அந்த விவகாரத்தில் தங்களை தவறாக இணைத்து அவதூறு பரப்பியதாகக் கூறி, யூடியூப் சேனல்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த ஜெயராமன் மற்றும் அவரது மகன் பிரவீன் ஜெயராமன், 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரியுள்ளனர்.

இந்த வழக்கு ஜூன் 5ஆம் தேதி நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம் கேட்டதையடுத்து, ஜூன் 12ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நீதிபதி விசாரணையை அத்தினத்திற்கு ஒத்திவைத்தார். மேலும், அந்த வரைக்கும் இந்த விவகாரத்தை ஊடகங்களில் அதிகரிக்க வேண்டாம் என இருபுறத்தாருக்கும் அறிவுறுத்தினார்.

Facebook Comments Box