தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டு:

“உலகளவில் எந்த ஒரு முதலீட்டு நிறுவனமும் அதானி போர்ட்ஸ் வெளியிட்ட ரூ.5,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வாங்க தயாராக இல்லாத நிலையில், மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்ஐசி நிறுவனமோ அந்த கடன் பத்திரங்களை முழுமையாக வாங்கியுள்ளது ஏன்?” என தமிழக காங்கிரஸ் தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்கு சொந்தமான ‘அதானி போர்ட்ஸ்’ நிறுவனத்தின் கடன் சுமை ரூ.36,422 கோடியாக உள்ளதாகவும், அதன் சொத்து மதிப்பில் 88% கடன்களாகவே இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இந்த சூழலில், சர்வதேச முதலீட்டாளர்கள் விலகிய நிலையில், பொதுமக்களின் பணத்தை நிர்வகிக்கும் எல்ஐசி நிறுவனம் இத்தகைய பாதிப்பான நிறுவனத்தில் ரூ.5,000 கோடி முதலீடு செய்தது ஏன்? இது மோடி அரசின் அழுத்தத்தினாலா? என அவர் கேள்வி எழுப்புகிறார்.

அதானி குழுமம் ஏற்கனவே பல சர்ச்சைகள், ஊழல் புகார்கள் மற்றும் ஹிண்டன்பர்க் அறிக்கையால் நம்பிக்கையிழப்பு போன்ற பிரச்சனைகளில் சிக்கியுள்ளது. இவ்வாறு நம்பகத்தன்மை குறைந்த நிறுவனத்தில் அரசு சொந்தமான எல்ஐசி மட்டும் முதலீடு செய்துள்ளது அதிர்ச்சிகரமானது என்றும், இது ‘குரோனி கேபிடலிசம்’ எனப்படும் கூட்டுசார் முதலாளித்துவத்தின் ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன், எல்ஐசி இந்த முதலீட்டினால் கடன் வசூலிக்க முடியாத சூழ்நிலையில் தள்ளப்படும் அபாயம் இருப்பதாகவும், இதை மோடி அரசின் பொறுப்பற்ற நடவடிக்கையாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Facebook Comments Box