மேற்கு வங்காளத்தில் யாஸ் புயல் சேதங்களைப் பார்வையிட்டு, பிரதமர் மோடி ஆய்வுக் கூட்டம் நடத்தினார். ஆனால், இந்த ஆய்வுக் கூட்ட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தது சரச்சையானது. இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் மம்தா பானர்ஜியை விமர்சித்துவருகிறார்கள். இந்நிலையில் அதிமுக மாஜி எம்.பி. மைத்ரேயன், மம்தா பானர்ஜியை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “வங்காள விரிகுடாவில் உருவான யாஸ் புயல் மிகக் கடுமையான புயலாக மாறிய போது, ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இரண்டு மாநிலங்களிலும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு பல லட்சம் வீடுகள் சேதம். மத்திய கொள்கை அடிப்படையில் இரண்டு மாநிலங்களின் சேதத்தை பிரதமர் வான் ஆய்வு செய்து பார்வையிட்டார். வான்வழி கணக்கெடுப்புக்குப் பிறகு இரு மாநிலங்களிலும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்.
பத்திரிக்கை அறிக்கைகளின் படி மேற்குவங்கத்தில் பிரதமர் ஆய்வு கூட்டம் நடத்திய போது மேற்கு வங்க முதல்வர் முப்பது நிமிடங்கள் காத்திருக்க வைத்தார். பிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஆய்வுக் கூட்டத்தையும் புறக்கணித்தார். அதன்பிறகு கலைக்குண்டாவில் பிரதமரை தனியாக சந்தித்து சேத மதிப்பீட்டை சமர்ப்பித்து, பிரதமரிடம், ‘எனக்கு வேறு வேலை இருக்கிறது’ என்று கூறி அந்த இடத்தை விட்டு வெளியே சென்றார்.
மேற்கு வங்க முதல்வரின் நடவடிக்கை நாகரீகமற்றது. பிரதமரை யாரும் தனி நபராக பார்க்க கூடாது. இவர்தான் இந்தியாவின் பிரதமர். இவர் எனக்கும் பிரதமர், மேற்கு வங்கத்திற்கும் பிரதமர். இது பாரதிய ஜனதா கட்சிக்கும் திரிணமூல் காங்கிரஸ்ஸுக்கும் உள்ள பிரச்சனை அல்ல. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள புரிதல். இந்த அம்சத்தை கருத்தில் கொள்ளாமல் பிரதமரை அவமரியாதை செய்வது நாட்டுக்கே அவமரியாதை.
மேற்கு வங்க முதல்வரின் காட்டுமிராண்டித்தனமான முரட்டுத்தனமான உதாரணத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற நாகரீகமற்ற நிகழ்வுகளை தடுக்க எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.” என்று மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post