திமுக கூட்டணி உறுதியாக உள்ளது; சிலர் அதை உடைக்க முயல்கிறார்கள் – திருமாவளவன்
சிதம்பரம் அருகே பின்னத்தூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மணமக்களை வாழ்த்தியதோடு, செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“ஜூன் 14-ம் தேதி திருச்சியில் ‘மதசார்பின்மையை காப்போம்’ என்ற பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணி மூலம், காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட INDIA கூட்டணியின் மதச்சார்பின்மை நிலையை உறுதிப்படுத்துவோம். இந்த கூட்டணியை உடைக்க சிலர் சதி செய்கிறார்கள்” என்றார்.
அதனைத் தொடர்ந்து,
“நீதிமன்ற உத்தரவை காரணமாக கூறி, கொடிக்கம்பங்களை அகற்றும் போது, சிலர் சாதிய நோக்குடன் செயல் படுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
திமுக கூட்டணியை தளர்த்த சிலர் கருத்துகளை வெளியிடுகிறார்கள். ஆனால், அந்த கூட்டணி உறுதியாகவே உள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவி, திருவள்ளுவரை ‘சனாதன புலவர்’ என சொல்வதன் மூலம் தமிழ் உணர்வாளர்களை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களாக மாற்ற நினைக்கிறார்.
அதேபோல், முருக பக்தர்களை பாஜக ஆதரவாளர்களாக மாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் இது வேலை செய்யாது.
தமிழர்கள் மதநம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் மதசார்பற்றவர்களாகவே இருக்கிறார்கள். மதத்தின் பெயரால் வன்முறையை தூண்ட முடியாது” என்றார்.
பின்னர், சிதம்பரம் மக்களவைத் தொகுதி நிதியிலிருந்து ரூ.8.5 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் இஸ்லாமிய ஐக்கிய ஜனநாயக பேரவை மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.