மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு எதிராக அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்யதுள்ளது.
இந்நிலையில் இந்து முன்னணி மனுவில் கோரியிருப்பது போல் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா.அரங்கநாதன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அறுபடை வீடுகளில் குறிப்பிட்ட ஆகம முறைப்படியே பூஜை செய்ய வேண்டும். முருகனின் அறுபடை வீடுகளில் அறங்காவலர் குழு அனுமதி பெற்று, பாலாலயம் அமைத்து மூலவருக்கு உரிய பூஜைகள் செய்து, உற்சவரை மட்டுமே வெளியே கொண்டு வர முடியும். இதனால் இந்து முன்னணி அமைக்கும் அறுபடை வீடுகளில் மூலவர் சிலை அமைக்கவே முடியாது. உற்சவர் சிலையும் ஆகமப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்திய பிறகே பூஜை செய்ய முடியும். மாதிரி அறுபடை வீடுகளில் இருவேளை பூஜை என்பது ஆகமத்துக்கு முரணானது.
கடவுளை கட்சிக்குப் பயன்படுத்தக்கூடாது. எனவே முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க தடை விதித்து, இந்து முன்னணியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.