கொடைக்கானல்: மரத்தின் மேல் இருந்து 500 ரூபாய் தாள்களை சூறைவிட்ட குரங்கு; சுற்றுலா பயணிகள் திகைப்பு

கொடைக்கானல் குணா குகை பகுதியில் குரங்கு ஒன்று சுற்றுலா பயணியிடமிருந்த 500 ரூபாய் கட்டை பறித்து மரத்தில் அமர்ந்து ஒவ்வொரு தாளாக வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், வெப்ப காலங்களில் மட்டும் அல்லாமல் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால் பிரபலமானது. அந்த பகுதியில் உள்ள குணா குகை, ‘குணா’ திரைப்படம் வெளிவந்த பிறகு பிரசித்தி பெற்றது. சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்துடன் மீண்டும் கவனத்தை பெற்றது. கடந்த சில ஆண்டுகளாக இந்த இடம் மிகுந்த பயணிகள் கூட்டத்தை ஈர்க்கிறது. அதே நேரத்தில், இப்பகுதி அடிக்கடி சர்ச்சைகளுக்கும் இடமாகிறது.

கொடைக்கானல் குணா குகை பகுதியில் மரத்தின் மீது அமர்ந்து கொண்டு 500 ரூபாய் தாள்களை வீசிய குரங்கு.
சமீபத்தில், மலேசியா நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், ஒரு இளைஞர் ஆபத்தான பகுதிக்கு புகுந்து ரீல்ஸ் வீடியோ எடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதற்கிடையே, கர்நாடகாவிலிருந்து வந்த ஒரு சுற்றுலாப் பயணி, தனது பையில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தார். அந்த நேரத்தில் ஒரு குரங்கு அந்த பையை பறித்து மரத்தின் மீது ஏறி அமர்ந்தது. பையில் இருந்த பணக் கட்டை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு நோட்டாக பரவலாக வீசத் தொடங்கியது.

இந்த சம்பவத்தை கண்டு வியந்த சுற்றுலாப் பயணிகள், மேல் நோக்கி பார்த்தபோது, குரங்கு ஒரே நேரத்தில் பணத்தை தூக்கி வீசுவதைப் பார்த்தனர். பாதிக்கப்பட்ட பயணியும் அவருடன் வந்தவர்களும் கீழே விழும் நோட்டுகளை எடுத்து திரட்டத் தொடங்கினர். மற்ற சுற்றுலாப் பயணிகளும் உதவினர். சில நோட்டுகள் பள்ளத்தாக்கில் விழுந்ததால் அவற்றை எடுத்துவைப்பது சாத்தியமாகவில்லை.

இந்த காட்சியின் வீடியோ தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு, வைரலாகியுள்ளது.

Facebook Comments Box