மா.சுப்பிரமணியன் மீது போலி ஆவண வழக்கில் ஜூலை 24ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் – சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு
சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம், போலி ஆவணங்களை பயன்படுத்தி நிலம் கையகப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது வரவுள்ள ஜூலை 24ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டி தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் எஸ்.கே.கண்ணனுக்கு சிட்கோவால் ஒதுக்கப்பட்ட நிலம், மா.சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த காலத்தில், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றியதாக சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்றவர் புகார் அளித்தார்.
இதனையடுத்து, சிபிசிஐடி போலீசார், போலி ஆவண தயாரித்தல், மோசடி, கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு போலீசாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்திலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தற்போது சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி என். வெங்கடவரதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மா.சுப்பிரமணியன் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளதால், குற்றச்சாட்டுப் பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரினார். ஆனால், நீதிபதி இது இறுதி வாய்ப்பு எனக் கூறி, ஜூலை 24ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்திலிருந்து உத்தரவைப் பெற வேண்டும், இல்லையெனில் அதே நாளில் குற்றச்சாட்டுப் பதிவு நடைமுறை செய்யப்படும் என தெரிவித்தார்.