திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்காக அமைக்கப்பட்ட திருப்பணி குழுவில் ஆகம நிபுணர்கள் இடம்பெறவில்லை. மேலும், கடலோர கட்டுப்பாட்டு மண்டலத்தில் நிர்ணயிக்கப்பட்ட அனுமதியின்றி கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலில் உள்ள 24 புனித தீர்த்தங்களில் தற்போது நாழிக்கிணறு மட்டுமே காணப்படுகிறது. பிற தீர்த்தங்களின் பெயருடன் கூடிய கல் தூண்கள் முன்பாக இருந்த நிலையில், அவை தற்போது திருப்பணியின் போது மறைக்கப்பட்டுள்ளன. இந்த தூண்கள் மீண்டும் நிறுவப்பட வேண்டும். கும்பாபிஷேக விழாவில் ஹெலிகாப்டரில் மலர் தூவ திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், வழக்கம்போல் கருடன் வருவதில்லை.

இந்த ஹெலிகாப்டர் வழி மலர் தூவும் நிகழ்ச்சி பாரம்பரியமானதொன்றாக இருந்தாலும், கோயில் நிதி இதற்குப் பயன்படுத்தப்படுவது ஏற்றதல்ல. எனவே, இந்த நிகழ்விற்கு தடையிட வேண்டும். மேலும், ஆகம நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, தீர்த்த தூண்கள் மீண்டும் அமைக்கப்படும்வரை கும்பாபிஷேக நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அறநிலையத்துறை சார்பில், “கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடை பெறுகின்றன. மேலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆகம நிபுணர்கள் அடங்கிய குழு அரசு மூலம் அமைக்கப்பட்டுள்ளது” என்று விளக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், “ஹெலிகாப்டரில் மலர் தூவுவது அல்லது புனித நீர் தூவுவது ஆகம சாஸ்திரங்களுக்கு முரணானது” என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “கோயிலுக்கு நேர்மறையான அனுபவம் பெறுவதற்காக வரும் எளிய பக்தர்கள், அடிப்படை வசதிகளின்மையால் அவதிக்குள்ளாகிறார்கள். குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் போன்று முக்கிய அம்சங்களுக்கு முதலில் கவனம் செலுத்த வேண்டும். திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக நடவடிக்கைகள் ஏற்கெனவே நிபுணர் குழுவின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன. மனுதாரர் விரும்பினால், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடம் முறையிடலாம். எனவே, இந்த மனு நிராகரிக்கப்படுகிறது” எனத் தீர்ப்பளித்தனர்.

Facebook Comments Box