சென்னையில் பிரபல உணவகத்தில் வருமான வரித் துறை சோதனை: நடிகர் ஆர்யா விளக்கம் அளிப்பு

ஒரு பிரபல உணவகத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, சென்னை நகரில் அந்த உணவகத்துடன் தொடர்புடைய ஆறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

‘சீ ஷெல்’ எனும் பெயரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த உணவகத் தொழில், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல கிளைகள் மூலம் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும், குறிப்பாக சென்னையில் அண்ணாநகர், வேளச்சேரி, பெருங்குடி, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த உணவகம் செயல்படுகிறது. இத்தொழிலை கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் குல்ஹி மூசா நடத்தி வருகிறார்.

சமீபத்தில், இந்த உணவகம் வருமானத்தை குறைத்து காட்டி வரிச் சட்டங்களை மீறி ஏமாற்றம் செய்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, கொச்சியில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகள், சீ ஷெல் நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான வருமான வரி அறிக்கைகள் மற்றும் நிதி நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

முறைகேடுகள் உள்ளதற்கான சந்தேகத்தின் அடிப்படையில், கொச்சியில் இருந்து வந்த அதிகாரிகள் சென்னை வருமான வரித்துறை குழுவுடன் இணைந்து, பெருங்குடி, நேரு நகர், வேளச்சேரி-தாம்பரம் சாலை, விஜயநகர், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சீ ஷெல் கிளைகளில் சோதனை மேற்கொண்டனர். தொழிலதிபர் குல்ஹி மூசாவின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

மேலும், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான வீட்டிலும் சோதனை செய்யப்பட்டது. அந்த வீட்டில், சீ ஷெல் உணவக கிளையில் பணி பாராட்டும் அவரது உறவினர் வசிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சோதனையின் போது முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், வரி ஏய்ப்பு நடந்ததற்கான ஆதாரங்கள் குறித்து மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனை முடிவடைந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்டது.

இதற்கிடையில், நடிகர் ஆர்யா ‘சீ ஷெல்’ உணவகத்துடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த கிளையை விற்பனை செய்துவிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

Facebook Comments Box