தமிழக முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்தில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் பங்களாவை காலி செய்ய ஓ.பன்னீர்செல்வம் அவகாசம் கேட்டுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு ஆட்சியில் அப்போதைய அமைச்சர்கள் பலரும் 10 ஆண்டுகளாக தொடர்ந்து வசித்து வந்தனர்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்துள்ளது. மே 2ஆம் தேதியன்று ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. இதனால் அரசு பங்களாவை அங்கிருந்த முன்னாள் அமைச்சர்கள் காலி செய்ய வேண்டும் என்பது விதி.
அரசு இல்லங்களில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர்கள் வீட்டை காலி செய்துள்ள நிலையில் அங்கு புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து புதிய அமைச்சர்கள் இங்கு குடியேறுவார்கள்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக செவ்வந்தி அரசு இல்லத்தில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி அங்கேயே தங்குவதற்கு அனுமதி கோரி கோரிக்கை வைத்தார். அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பங்களாவை காலி செய்ய ஓ.பன்னீர்செல்வம் அவகாசம் கேட்டுள்ளார். தனது தம்பி ஓ.பாலமுருகன் மறைவால் முழுமையாக பங்களாவை காலி செய்ய முடியவில்லை என்று கூறி அவகாசம் கேட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது ஒருமுறை தனது அரசு இல்லத்தை காலி செய்த ஓபிஎஸ் சென்னையில் புது வீடு பார்த்து குடியேறினார். மீண்டும் அதிமுக ஒன்றுபட்ட உடன் துணை முதல்வரான ஓபிஎஸ் மீண்டும் அரசு இல்லத்தில் குடியேறினார். தற்போது எம்எல்ஏவாக மட்டுமே உள்ள ஒபிஎஸ் அமைச்சர் பங்களாவை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Discussion about this post